142 அடியை நெருங்குகிறது பெரியாறு அணை நீர்மட்டம்

நேற்று வரை 511 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை முதல் 1100 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Update: 2022-12-15 05:55 GMT

கூடலூர்,

முல்லை பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நேற்று முன்தினம் 541 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 1166 கனஅடியாக அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 141 அடியை எட்டியதால் இடுக்கி மாவட்டத்திற்கு 2-ம் கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த நவம்பர் 9-ந்தேதி 136 அடியை எட்டியவுடன் முதல்கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை பொதுப்பணித்துறையினரால் விடப்பட்டது. தற்போது அணையின் நீர்மட்டம் 141 அடியை கடந்து விட்டதால் இன்னும் ஓரிரு நாளில் 142 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று காலை அணையின் நீர்மட்டம் 141.40 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 2106 கனஅடி நீர் வருகிறது.

நேற்று வரை 511 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை முதல் 1100 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. ரூல்கர்வ் விதிமுறைப்படி முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியதும் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் இடுக்கி மாவட்டத்திற்கும், லோயர்கேம்ப் வழியாக தமிழக பகுதிக்கும் திறக்கப்படும். இதனை தவிர்க்கும் வகையில் இன்று காலை முதல் அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

நீர் இருப்பு 7504 மி.கனஅடியாக உள்ளது. பெரியாறு அணை நீர்மட்டத்தை மே 31-ந்தேதி வரை 142 அடிவரை தேக்கி வைத்து கொள்ளலாம் என்பதால் கூடுதல் தண்ணீரை வெளியேற்றி வைகை அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் முயற்சியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்