பெரியாக்குறிச்சி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ராஜினாமா கடிதம் கொடுத்ததால் பரபரப்பு

பெரியாக்குறிச்சி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ராஜினாமா கடிதம் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-02-15 18:45 GMT

விருத்தாசலம், 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த நெய்வேலி அருகே உள்ள பெரியாக்குறிச்சி ஊராட்சியில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு 12 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று 1-வது வார்டு உறுப்பினர் சீனிவாசலு, 5-வது வார்டு உறுப்பினர் சுமதி, 6-வது வார்டு உறுப்பினர் தட்சணவள்ளி, 8-வது வார்டு உறுப்பினர் சிவகாமி, 10-வது வார்டு உறுப்பினர் இளவரசி, 12-வது வார்டு உறுப்பினர் தீபா ஆகியோர் விருத்தாசலம் ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் உதவி இயக்குனர் இன்பாவை திடீரென சந்தித்து தங்களது ராஜினாமா கடிதத்தை கொடுத்தனர்.

அந்த கடிதத்தில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

தன்னிச்சையாக செயல்படுகின்றனர்

பெரியாக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணை தலைவர் இணைந்து தன்னிச்சையாக செயல்பட்டு வருகின்றனர். வார்டுகளில் நடைபெறும் பணிகள் குறித்து எந்தவித தகவலும் எங்களுக்கு தருவதில்லை. இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. மேலும் எங்கள் ஊராட்சியில் நடைபெறும் பிரச்சினைகள் குறித்து மற்ற ஊராட்சி மன்ற கூட்டமைப்பு சார்பாக எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். ஊராட்சி பணிகள் போன்ற வேலைகளுக்கு தனக்கு விருப்பப்பட்ட ஆட்களை வைத்து பணி செய்கின்றனர்.

ஊராட்சியில் நடைபெறும் பணிகள் குறித்து தலைவரிடம் கேட்டால் அதற்கு சரியான பதில் தருவதில்லை. மாதாந்திர கூட்டம் இதுவரை நடைபெறவில்லை. எனவே தன்னிச்சையாக செயல்படும் தலைவர் மற்றும் துணைத்தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லாவிட்டால், நாங்கள் எங்கள் உறுப்பினர் பதவியை கூண்டோடு ராஜினாமா செய்கிறோம். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.

கடிதத்தை பெற்றுக்கொண்ட ஊராட்சிகள் உதவி இயக்குனர் இன்பா இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். 6 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் அதிகாரியிடம் ராஜினாமா கடிதம் கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்