பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில்மத்திய மருத்துவ குழுவினர் ஆய்வு

பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் மத்திய மருத்துவ குழுவினர் ஆய்வு செய்தனர்.

Update: 2023-03-27 18:45 GMT

பெரியகுளத்தில் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு, மத்திய சுகாதார குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய தரம் உயர்த்துவதற்கான மருத்துவ குழுவினர் நேற்று வந்தனர். பின்னர் குழு அதிகாரிகள் நிஷாந்த் குமார் ஜெய்ஸ்வால், அபுதே சக்தி திவாரி, விஜய் சந்திரஜா ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் ஆஸ்பத்திரியில் உள்ள அனைத்து பிரிவுகளுக்கும் சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், ரத்த பரிசோதனை மையம், மருந்துகள் வழங்கும் அறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கு சென்று உரிய முறையில் பணிகள் மேற்கொள்ளப்படுகிறதா? என்று கேட்டறிந்தனர். இந்த குழுவினர் நாளை (புதன்கிழமை) வரை ஆய்வு செய்ய உள்ளனர். இந்த ஆய்வின்போது மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குனர் பரிமளா தேவி, மருத்துவமனை கண்காணிப்பாளர் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதைத்தொடர்ந்து பெரியகுளம் நகராட்சி தலைவர் சுமிதா சிவக்குமார் தலைமையில் கவுன்சிலர்கள், மருத்துவ குழுவினரிடம் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் தீவிர இதய அறுவை சிகிச்சை பிரிவு தொடங்கி நோயாளிகளுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும். அதற்கான டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு ஒன்றை கொடுத்தனர். இதுகுறித்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்