மனநல மறுவாழ்வு மையங்களில் அவ்வப்போது ஆய்வு நடத்த வேண்டும் - அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

மனநல மறுவாழ்வு மையங்களில் அவ்வப்போது ஆய்வு நடத்த வேண்டும் என்று அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-04-10 09:50 GMT

சென்னை,

தமிழ்நாட்டில் இயங்கி வரும் மனநல மறுவாழ்வு மையங்களில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பது தொடர்பாக ஆய்வு நடத்த மனநல மருத்துவ இயக்குனரகத்திற்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரத்தைச் சேர்ந்த சையத் அலி பாத்திமா என்பவரது கணவர் முகமது ரஹீம் மன அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டதால் சிகிச்சைக்காக சிட்லபாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அனுமதிக்கப்பட்ட சில நாட்களில் முகமது ரஹீமின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டதால், அவரை பார்ப்பதற்காக குடும்பத்தினர் நேரில் சென்ற போது அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து அந்த தனியார் மையத்தின் மருத்துவர்கள், ஊழியர்கள் தாக்கியதால்தான் தன்னுடைய கணவர் இறந்துவிட்டார்; எனவே அவரது இறப்புக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அவரது மனைவி 2014-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் இந்த சம்பவம் தொடர்பாக குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்ட அந்த மறுவாழ்வு மையம் எந்த அனுமதியும் இல்லாமல் செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு கோர்ட்டில் நிலுவையில் இருக்கக்கூடிய வழக்கை நான்கு மாதத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார். மேலும் சம்பந்தப்பட்ட அந்த தனியார் மறுவாழ்வு மையத்தில் ஆய்வு நடத்த சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள மனநல மருத்துவ இயக்குனருக்கு உத்தரவிட்ட நீதிபதி, தமிழக முழுவதும் இதுபோல இயங்கி வரக்கூடிய அனைத்து மனநல மறுவாழ்வு மையங்களிலும் அவ்வப்போது ஆய்வு நடத்த வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்திருக்கிறார்.Full View

Tags:    

மேலும் செய்திகள்