பெரம்பலூர் நகராட்சி ஒப்பந்த பணியாளர்கள் 12-ந்தேதி மறியலில் ஈடுபட முடிவு

கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் நகராட்சி ஒப்பந்த பணியாளர்கள் 12-ந்தேதி மறியலில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

Update: 2023-07-02 18:30 GMT

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்கத்தின் பெரம்பலூர் நகராட்சி கிளையின் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் குணசேகரன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் மாவட்ட செயலாளர் அகஸ்டின் கோரிக்கைகளை விளக்கி பேசினார். கூட்டத்தில் பெரம்பலூர் நகராட்சி தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட ஒப்பந்த பணியாளர்களுக்கு புதன்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் பகுதிநேர விடுமுறை வழங்கிட வேண்டும். பண்டிகை நாட்களில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கிட வேண்டும். குறைந்தபட்ச ஊதிய அரசாணைக்கு மாறாக ஊதியத்தை குறைக்கக்கூடாது. மாதா மாதம் பிடித்தம் செய்த வருங்கால வைப்பு நிதியை பணியாளர் கணக்கில் செலுத்திட வேண்டும். தொடர்ந்து பணிபுரியும் ஒப்பந்த தினக்கூலி தூய்மை பணியாளர்களை நிரந்தரமாக்கிட வேண்டும். கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்காமல் ஒப்பந்தம் நீட்டிப்பு செய்யும் முறையை கைவிட்டு நகராட்சி நிர்வாகமே நேரிடையாக மாவட்ட கலெக்டர் அறிவித்த தினக்கூலியை வழங்கிட வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை பெரம்பலூர் நகராட்சி நிர்வாகம் நிறைவேற்ற வலியுறுத்தி சங்கத்தின் சார்பில் வருகிற 12-ந்தேதி பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே காலை 10 மணியளவில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் சாலை மறியல் போராட்டம் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்