பெரம்பலூர் வெள்ளந்தாங்கி அம்மன் ஏரி நிரம்பியது

பலத்த மழையினால் பெரம்பலூர் வெள்ளந்தாங்கி அம்மன் ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2022-06-16 18:13 GMT

பலத்த மழை

பெரம்பலூர் மாவட்டத்தில் கோடை காலத்திலும் அவ்வவ்போது பலத்த மழை பெய்தது. தற்போது கடந்த சில நாட்களாகவே அவ்வவ்போது இரவு நேரத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மாதத்தில் கடந்த 5, 14-ந் தேதிகளிலும், நேற்று முன்தினம் இரவு இடி-மின்னலுடன் கூடிய சூறை காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

இதனால் மாவட்டத்தில் ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் விவசாய பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்துள்ளது.

மழையளவு

தற்போது பெய்த மழையினால் பெரம்பலூர் சங்குபேட்டை பின்புறம் உள்ள கீழேறி எனப்படும் வெள்ளந்தாங்கி அம்மன் ஏரி நிரம்பி மறுகாலில் தண்ணீர் பாய்ந்து ஓடுகிறது. இதனால் அந்த ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த ஏரி கடந்த நவம்பர் மாதம் நிரம்பியது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த ஏரி மீண்டும் நிரம்பியுள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 574 மில்லி மீட்டர் மழை பெய்தது. பிப்ரவரி மாதத்தில் 17 மி.மீ., மார்ச் மாதத்தில் 170 மி.மீ., ஏப்ரல் மாதத்தில் 150 மி.மீ., மே மாதத்தில் 1,031 மி.மீ., ஜூன் மாதம் இதுவரை 955 மி.மீ. மழை பெய்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்