சாம்பல் வெளியேறுவதை தடுக்கக்கோரி மக்கள் போராட்டம்

திண்டுக்கல் அருகே தனியார் ஆலைகளில் இருந்து சாம்பல் வெளியேறுவதை தடுக்கக்கோரி மறியலுக்கு முயன்ற மக்கள் சமரசத்துக்கு வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.

Update: 2023-06-06 19:00 GMT

சாம்பலால் பாதிப்பு

திண்டுக்கல்-கரூர் சாலையில் என்.எஸ்.நகர் விஸ்தரிப்பு பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் தனியார் அரிசி ஆலைகள் செயல்படுகின்றன. இந்த ஆலைகளில் இருந்து வெளியேறும் கருப்புநிற சாம்பல் காற்றில் கலந்து குடியிருப்பு பகுதிக்கு வருவதாக கூறப்படுகிறது.

மேலும் காற்றில் வரும் சாம்பல்கள் குடிநீர், உணவுகளில் விழுவதாக மக்கள் புகார் கூறுகின்றனர். அதோடு சாம்பல் கலந்த காற்றை சுவாசிப்பதால் சுவாசக்கோளாறு ஏற்படுவதாகவும் குற்றம்சாட்டி வருகின்றனர். எனவே ஆலைகளில் இருந்து சாம்பல் வெளியேறுவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடவும் முடிவு செய்தனர்.

மறியல் முயற்சி

இதற்காக அந்த பகுதியை சேர்ந்த மக்கள் நேற்று திண்டுக்கல்-கரூர் சாலையில் திரண்டனர். இதை அறிந்த மேற்கு தாசில்தார் செழியன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலுக்கு முயன்ற பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே தனியார் ஆலைகளில் இருந்து சாம்பல் வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதிஅளித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் மறியல் முயற்சியை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்