கறம்பக்குடி தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள்குடியேறும் போராட்டம்

பொதுப்பாதையை தனி நபருக்கு பட்டா வழங்கியதை கண்டித்து கறம்பக்குடி தாலுகா அலுவலகத்தில் சமையல் பாத்திரங்கள், பாய், தலையைணயுடன் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-10-04 17:11 GMT

குடிேயறும் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி சேவுகன் தெருவில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்த பொதுப் பாதையை அதே பகுதியை சேர்ந்த தனி நபருக்கு வருவாய்த்துறையினர் பட்டா வழங்கியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் பாதையை பயன்படுத்த முடியாத நிலை உருவானது.

இதனால் ஆத்திரமடைந்த சேவுகன் தெரு பகுதி பொதுமக்கள் இன்று காலை வருவாய்த்துறையினரை கண்டித்து கறம்பக்குடி தாலுகா அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 100-க்கும் மேற்பட்ட பெண்கள் சமையல் பாத்திரங்கள், பாய், தலையணை போன்றவற்றுடன் தங்கள் குழந்தைகளையும் அழைத்து கொண்டு வந்து கறம்பக்குடி தாலுகா அலுவலகம் முன்பு அமர்ந்தனர்.

நடவடிக்கை எடுக்கவில்லை

அப்போது பொதுப்பாதையை தனிநபர் பட்டா பெற்றுக்கொண்டு வேலி அமைத்ததால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் வெளியே செல்ல முடியாமல் தவித்து வருவதாகவும், இது சம்பந்தமாக மாவட்ட கலெக்டர், வருவாய் கோட்டாட்சியர், தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பலமுறை மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் தாலுகா அலுவலகத்தில் குடியேறியதாக தெரிவித்தனர்.

மேலும் தனிநபருக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்து தங்களுக்கு பாதை வழிவகை செய்து தரும் வரையில் தாலுகா அலுவலகத்தில் குடியிருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அசம்பாவிதங்கள் ஏற்படாத வண்ணம் போலீசார் குவிக்கப்பட்டனர்.

உறுதி அளித்தனர்

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் கறம்பக்குடி தாசில்தார் ராமசாமி, போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தூரபாண்டியன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது கோட்டாட்சியர் மூலம் உரிய தீர்வு காண்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்