வேலூர் மாநகராட்சியில் 16 இடங்களில் தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி

வேலூர் மாநகராட்சியில் 16 இடங்களில் தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டது.

Update: 2022-06-25 17:59 GMT

வேலூர்

வேலூர் மாநகராட்சியில் 16 இடங்களில் தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டது.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

வேலூர் மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் எனும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. 2-வது மண்டலம் சார்பில் சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் தலைமை தாங்கினார். மேயர் சுஜாதா முன்னிலை வகித்தார். சுகாதார அலுவலர் லூர்துசாமி வரவேற்றார்.

இதில் சுமதிமனோகரன் உள்ளிட்ட கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டது. மேலும் பிளாஸ்டிக் பைகளை தவிர்க்குமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டது. தொடர்ந்து திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. இதனையொட்டி 2-ம் மண்டலத்துக்கு உட்பட்ட பல்வேறு முக்கிய கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரும் பணியை தூய்மைப் பணியாளர்கள் மேற்கொண்டனர்.

துப்புரவு பணி

இதேபோல 4-வது மண்டலத்துக்கு உட்பட்ட கஸ்பா மாசிலாமணி பள்ளி மைதானத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டல குழு தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். உதவி கமிஷனர் பிரபுகுமார்ஜோசப், சுகாதார அலுவலர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அதில், வீடுகளுக்கு குப்பை சேகரிக்க செல்லும்போது மக்கும் குப்பை, மக்காத குப்பை என குப்பைகளை பிரித்து பெற்று மக்கும் குப்பையை உரமாக தயாரிக்க வேண்டும் என்று மாநகராட்சி தூய்மை பணியாளர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

மேலும் குப்பை சேகரிக்க வரும் தூய்மை பணியாளர்களிடம் பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் மைதானத்தில் விளையாட்டு வீரர்கள் மூலம் ஒட்டுமொத்த துப்புரவு பணி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் ஈஸ்வரன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து உறுதிமொழியும் ஏற்கப்பட்டது.

16 இடங்களில்...

இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் கூறுகையில், ''வேலூர் மாநகராட்சியில் 2-வது மற்றும் 4-வது வாரங்களில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும். இதன் மூலம் துப்புரவு பணி மேற்கொள்ளுதல் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் வழங்கப்படும். வேலூர் மாநகராட்சியில் 16 இடங்களில் இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. மேலும் மாநகராட்சி முழுவதும் துப்புரவுப் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது'' என்றார்.

காட்பாடி1-வது மண்டலமான காட்பாடி தாராபடவேட்டில் தூய்மைக்கான மக்கள் இயக்க விழாநடந்தது. இதனை முன்னிட்டு தீவிர தூய்மை பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடந்தன.

மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் வழங்கிய பொதுமக்களுக்கு மாநகராட்சி மேயர் சுஜாதா சிறப்பு பரிசுகளை வழங்கினார். விழாவில் துணை மேயர் எம்.சுனில்குமார், மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார், மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, மண்டல சுகாதார அலுவலர் சிவகுமார், மாநகராட்சி கவுன்சிலர்கள் அன்பு, விமலா சீனிவாசன், ரவிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்