தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் விழிப்புணர்வு நிகழ்ச்சி; ராஜா எம்.எல்.ஏ. பங்கேற்பு

சங்கரன்கோவில் நகராட்சியில் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ராஜா எம்.எல்.ஏ. பங்கேற்றார்.

Update: 2023-06-11 18:45 GMT

சங்கரன்கோவில்:

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி நகராட்சி பகுதிகளில் கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த இயக்கத்தின் மூலம் நகரின் பொது இடங்கள், நீர்நிலைகள் போன்ற இடங்களை சுத்தம் செய்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த இயக்கத்தின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி சங்கரன்கோவில் பழைய நகராட்சி அலுவலக வளாகத்தில் தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது. நகராட்சி சேர்மன் உமாமகேஸ்வரி முன்னிலையில் தன்னார்வலர்களுக்கு குப்பையை தரம் பிரித்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் நகரின் பொது இடங்களில் பெருமளவில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள், விளம்பர பலகைகள் அப்புறப்படுத்தபட்டது. மகளிர் குழுக்கள், தன்னார்வ தொண்டர்கள் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் முன்னிலையில் தூய்மை விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

தொடர்ந்து மாணவர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோரை வீடு வீடாக அழைத்து சென்று பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் மட்கும் குப்பை, மட்காத குப்பை என பிரித்து வழங்குவது குறித்து ராஜா எம்.எல்.ஏ. விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதற்கான ஏற்பாடுகளை நகராட்சி ஆணையர் சபாநாயகம் தலைமையில் சுகாதார அலுவலர் பாலச்சந்தர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் மாரிசாமி, வெங்கடராமன், மாரிமுத்து மற்றும் தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்