பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம்
கல்லணைக்கால்வாய் பாசன வாய்க்கால் புனரமைப்பு குறித்து பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் பட்டுக்கோட்டையில் 2-ந்தேதி நடக்கிறது.;
தஞ்சாவூர், ஜன.31-
கீழ்காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் முருகேசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நீர்வளத்துறையின் பராமரிப்பில் உள்ள கல்லணைக்கால்வாயில் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் உதவியுடன் நீட்டித்தல், புனரமைத்தல் மற்றும் நவீனப்படுத்துதல் திட்டத்தின் கீழ் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் தஞ்சை மாவட்டம் கல்லணையிலிருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தின் தொடர்ச்சியாக ஒரத்தநாடு வட்டம், தெலுங்கன்குடிகாடு கிராமத்தில் தொடங்கும் வடகாடு கிளைகால்வாய் அதன் கிளைவாய்க்கால்கள் மற்றும் பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு வட்டங்களில் உள்ள ஏரிகள் புனரமைக்கப்படுகிறது. இது குறித்து தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா ஆலத்தூர் கிராமத்தில் உள்ள வி.ஆர்.டி. திருமண மண்டபத்தில் பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் வருகிற 2-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. எனது தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் நீர்வளத்துறை என்ஜினீயர்கள் கலந்து கொள்கிறார்கள். எனவே பொதுமக்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.