மக்கள் நேர்காணல் முகாம்
வலங்கைமான் பகுதியில் மக்கள் நேர்காணல் முகாம் நடந்தது
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வருவாய் வட்டத்திற்கு உட்பட்ட கோவிந்தகுடி, ஆவூர், ஊத்துக்காடு உள்ளிட்ட கிராமங்களுக்கான மக்கள் நேர்காணல் முகாம் ஆவூர் பசுபதீஸ்வரர் கோவில் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முகாமிற்கு திருவாரூர் உதவி கலெக்டர் சங்கீதா தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு உறுப்பினர் அன்பரசன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆவூர் துர்கா ரமேஷ், கோவிந்தகுடி மணிகண்டன், ஊத்துக்காடு ரேவதி சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில், 3 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து 84 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. அந்த மனுக்கள் உடனடியாக பரிசீலனை செய்யப்பட்டு 51 பேருக்கு முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, வேளாண்துறை சார்ந்த மானியத்துடன் கூடிய இடுபொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மீதமுள்ள மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. முகாமில் தாசில்தார் சந்தான கோபாலகிருஷ்ணன், மண்டல துணை தாசில்தார் ஆனந்த், ஒன்றியக்குழு உறுப்பினர் நஸ்ரின் ரசூல் மற்றும் வருவாய் துறையினர், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அனைத்துத் துறை அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.