ஊட்டியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்: வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் -கலெக்டரிடம், அம்மங்காவு பொதுமக்கள் மனு

ஊட்டியில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று அம்மங்காவு பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

Update: 2023-06-12 18:45 GMT

ஊட்டி

ஊட்டியில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று அம்மங்காவு பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

பட்டா வழங்க கோரிக்கை

ஊட்டியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். தொடர்ந்து மனுக்களை அந்தந்த துறை அலுவலர்களிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதில் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது குந்தா தாலுகா தேவர் சோலை எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு பட்டா வழங்க கோரி கலெக்டரிடம் மனுக்கள் அளித்தனர். இதைத் தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அலுவலரிடம் கலெக்டர் உத்தரவிட்டார்.இது குறித்து தேவர்சோலை பகுதி மக்கள் கூறும்போது, பல ஆண்டுகளுக்கும் மேலாக மனுக்கள் அளித்து வருகிறோம். ஆனால் இதுவரை பட்டா வழங்க வில்லை எனக் கூறினர்.

சாலை பணி தொடங்கவில்லை

இதேபோல் பந்தலூர் தாலுகா அம்மங் காவு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது:-

சேரங்கோடு ஊராட்சிக்குட்பட்ட அம்மங் காவு, பந்தபிழாவில் இருந்து தைதல் கடவு வழியாக குன்றில் கடவு செல்லும் சாலை பழுதடைந்து காணப்படுகிறது இதை சீரமைக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடப்பட்டது. இதைத்தொடர்ந்து கூடலூர் ஊராட்சி ஒன்றியம் மூலம் நிதி ஒதுக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டது. ஆனால் இதுவரை சாலை பணி தொடங்கவில்லை. இது தொடர்பாக கிராம சபை கூட்டத்திலும் பலமுறை கோரிக்கை விடப்பட்டது.

அதன் பின்னர் சுமார் 50 மீட்டர் தூரம் மட்டும் கற்கள் கொட்டப்பட்டது. பின்னர் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளைக் கடந்தும் சாலை அமைக்காமல் உள்ளதால் பல்வேறு தரப்பு மக்களும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

வீட்டு மனை பட்டா

இதேபோல்விவசாய தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் வழங்கப்பட்ட மனுவில் கூறியுள்ளதாவது:- அம்மங்காவு பகுதியில் வருவாய்த்துறை நிலம் உள்ளது. இதனால் நிலம் இல்லாதவர்களுக்கு பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கி வீடு கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மின்சாரம் உள்பட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். இதேபோல் தைதல் கடவு, பந்த பிழா, ஒடைக்கம் வயல், மாங்கவயல், பொட்டச் சேரா, எருமகுளம், பாலவயல், ஆராங்குளம், சின்ன ஒலிமடா, பெரிய ஒலிமடா ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்