மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்
ராணிப்பேட்டையில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.;
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி, பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளிடம் இருந்து நேரடியாக மனுக்களை பெற்றார். பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடன் உதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக வீடுகள் வேண்டி, பொது பிரச்சினை, குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் கொடுத்தனர். மொத்தம் 252 மனுக்கள் பெறப்பட்டது.
அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலரிடம் வழங்கி உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பொதுமக்கள், அனைத்து துறை அலுவலர்களுக்கு 300-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, துணை கலெக்டர்கள் தாரகேஸ்வரி, இளவரசி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் லதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.