மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
மயிலாடுதுறையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 157 மனுக்கள் பெறப்பட்டன;
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமையில் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனுக்களை அளித்தனர். கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, பட்டாமாறுதல், வேலைவாய்ப்பு, முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவை உதவித்தொகை, புகார் தொடர்பான மனுக்கள், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, வங்கிகடன், மாற்றுத்திறனாளி உபகரணங்கள், அடிப்படை வசதி கோரி என மொத்தம் 157 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விபரத்தை மனுதாரர்களுக்கு தெரிவிக்கவேண்டும் என கலெக்டர் தெரிவித்தார். முன்னதாக 15 பயனாளிகளுக்கு ரூ.9 லட்சத்து 71 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளுக்கான காசோலையை மாவட்ட கலெக்டர் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜகணேசன், சீர்காழி உதவி கலெக்டர் அர்ச்சனா, தாட்கோ மாவட்ட மேலாளர் சுகந்தி பரிமளம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் ரவி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் சுரேஷ் மற்றும் அனைத்துதுறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.