மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.10 லட்சம் நிதியுதவி

மயிலாடுதுறையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ, 10 லட்சம் மதிப்பிலான நிதியுதவியை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.

Update: 2023-08-28 18:45 GMT

மயிலாடுதுறையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ, 10 லட்சம் மதிப்பிலான நிதியுதவியை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமையில் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் கலெக்டரிடம் மனுக்களை அளித்தனர்.

இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டாமாறுதல் கோரி 45 மனுக்களும், வேலைவாய்ப்பு கோரி 36 மனுக்களும், முதியோர், மாற்றுத்திறனாளிகள், மற்றும் விதவை உதவித்தொகைகோரி 35 மனுக்களும், புகார் தொடர்பான மனுக்கள் 30, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, வங்கிகடன், மாற்றுத்திறனாளி உபகரணங்கள் கோரி 34 மனுக்களும், அடிப்படை வசதி கோரி 28 மனுக்களும் என மொத்தம் 208 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களை மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விபரத்தை மனுதாரர்களுக்கு தெரிவிக்கவேண்டும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

ரூ.10 லட்சம் நிதியுதவி

பின்னர், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டு கழகத்தின் (தாட்கோ) சார்பில் மகளிர் வேளாண் நிலம் வாங்கும் திட்டத்தின் கீழ் பயனாளி ஒருவருக்கு ரூ.5 லட்சத்திற்கான காசோலையும், 2 மகளிர் சுயஉதவிக் குழுவிற்கு தலா ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்கான காசோலையும், குத்தாலம் தாலுகா, பெருஞ்சேரி கிராமத்தை சேர்ந்த செந்தமிழ்ச்செல்வி என்பவருக்கு சுயதொழில் தொடங்க மாவட்ட கலெக்டரின் தன்விருப்ப நிதியிலிருந்து ரூ.30 ஆயிரத்திற்கான காசோலையும் என மொத்தம் ரூ.10 லட்சத்து 30 ஆயிரம் நிதியுதவியை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

கூட்டத்தில், சமூக பாதுகாப்பு திட்டம் தனித்துணை கலெக்டர் கண்மணி, சீர்காழி உதவி கலெக்டர் அர்ச்சனா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் ரவி, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜகணேஷ், தாட்கோ மாவட்ட மேலாளர் சுகந்தி பரிமளம் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்