தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 1,120 வழக்குகளுக்கு சமரச தீர்வு
சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றங்கள் மூலம் 1,120 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.3 கோடியே 77 லட்சத்து 49 ஆயிரம் பயனாளிகளுக்கு கிடைத்தது.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றங்கள் மூலம் 1,120 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.3 கோடியே 77 லட்சத்து 49 ஆயிரம் பயனாளிகளுக்கு கிடைத்தது.
மக்கள் நீதிமன்றம்
தேசிய சட்டப் பணிகள் ஆணையத்தின் உத்தரவுப்படியும் மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படியும், சிவகங்கை மாவட்டத்தில் 10 மக்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகளும், சமரச குற்றவியல் வழக்குகளும் மோட்டார் வாகன விபத்து வழக்குகளும், வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளும் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.
சட்டப்பணிகள் ஆணையத்தின் தலைவர் முதன்மை மாவட்ட நீதிபதி சுமதி சாய் பிரியா, கூடுதல் மாவட்ட நீதிபதி சத்திய தாரா, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி பக்தவச்சலு, குடும்ப நல நீதிபதி முத்துக்குமரன், தலைமை குற்றவியல் நீதிதுறை நடுவர் சுதாகர், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி பரமேஸ்வரி, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிபதி இன்பகார்த்திக், மாவட்ட உரிமையியல் நீதிபதி இனியா கருணாகரன், குற்றவியல் நீதிதுறை நடுவர் எண்.1. அனிதா கிரிஸ்டி, குற்றவியல் நீதிதுறை நடுவர் எண் 11. சத்திய நாராயணன், கூடுதல் மகிளா குற்றவியல் நீதிதுறை நடுவர் ஆப்ரின் பேகம் மற்றும் வக்கீல்கள் ஆகியோர் வழக்குகளை விசாரித்தனர்.
1,120 வழக்குகளுக்கு தீர்வு
இந்த தேசிய மக்கள் நீதிமன்றங்களில் மொத்தம் 2,043 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 1,060 வழக்குகள் சமரசமாக தீர்க்கப்பட்டு ரூ.2 கோடியே 99 லட்சத்து 34 ஆயிரத்து 270 வரையில் பயனாளிகளுக்கு கிடைத்தது. அதுபோல் வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளில் 850 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 60 வழக்குக்கு தீர்வு காணப்பட்டு ரூ. 78 லட்சத்து 14 ஆயிரத்து 850 வரையில் வங்கிகளுக்கு வரவானது. மொத்தம் 1,120 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.3 கோடியே 77 லட்சத்து 49 ஆயிரத்து 120 பயனாளிகளுக்கு கிடைத்தது.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பணியாளர்கள் செய்திருந்தனர். இதில் வக்கீல்கள் திரளாக கலந்து கொண்டனர். பயனாளிகள் திரளாக கலந்து கொண்டு தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் பயன்பெற்றனர்.