விழுப்புரம் கோர்ட்டில் நடந்தமக்கள் நீதிமன்றத்தில் 2,354 வழக்குகளுக்கு தீர்வு

விழுப்புரம் கோர்ட்டில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 2,354 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

Update: 2023-05-13 18:45 GMT


விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேற்று மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இம்முகாமிற்கு எஸ்.சி., எஸ்.டி. வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற மாவட்ட நீதிபதி பாக்கியஜோதி தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். மகளிர் நீதிமன்ற நீதிபதி ஹர்மீஸ் முன்னிலை வகித்தார். தலைமை குற்றவியல் நீதிபதி புஷ்பராணி, அனைவரையும் வரவேற்றார்.

இதில் முதன்மை சார்பு நீதிபதி ஜெயப்பிரகாஷ், மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள் வெங்கடேசன், பிரபாதாமஸ், முதுநிலை சார்பு நீதிபதி பஷீர், அரசு வக்கீல்கள் சுப்பிரமணியன், நடராஜன், வக்கீல் சங்க தலைவர்கள் தயானந்தம், காளிதாஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

2,354 வழக்குகளுக்கு தீர்வு

இம்முகாமில் விபத்துகள் தொடர்பான வழக்குகள், காசோலை வழக்குகள், குடும்ப நல வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள், தொழிலாளர்கள் தொடர்பான வழக்குகள், மின் பயன்பாடு, வீட்டு வரி மற்றும் இதர பொது பயன்பாடு சம்பந்தப்பட்ட வழக்குகள், நுகர்வோர் தொடர்பான வழக்குகளும் எடுத்துக்கொண்டு சமரசமாக விசாரிக்கப்பட்டது. அதுபோல் ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகளை தவிர புதிதாக தாக்கல் செய்ய தகுதியுடைய வழக்குகள் மற்றும் பிரச்சினைகளுக்கும் சமரச முறையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் நீதிபதிகள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், அரசு வக்கீல்கள், சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர், வழக்குகளுக்கு சமரச அடிப்படையில் தீர்வு கண்டனர். இம்முகாமில் 4,656 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதன் முடிவில் 2,354 வழக்குகள் சமரசமாக முடிக்கப்பட்டு ரூ.14 கோடியே 38 லட்சத்து 3 ஆயிரத்து 517-க்கு தீர்வு காணப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடுகளை சட்டப்பணிகள் ஆணைக்குழு நிர்வாக உதவியாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்