ஒரு சதவீதம் தனி இடஒதுக்கீடு கோரி உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு உயரம் குறைந்தோர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் சார்பில் நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கவன ஈர்ப்பு போராட்டம் நடந்தது.

Update: 2023-10-25 20:40 GMT

சென்னை,

உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனம் வழங்கவேண்டும். ஒரு சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்கி அரசுத்துறை, கூட்டுறவுத்துறை, அரசு உதவிபெறும் நிறுவனங்களில் வேலை வழங்கிட சிறப்பு அரசாணை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு உயரம் குறைந்தோர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் சார்பில் நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கவன ஈர்ப்பு போராட்டம் நடந்தது.

போராட்டத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஆதரவு அளித்தார். மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் மாநிலத்தலைவர் கோபிநாத் வரவேற்றார். மாநிலச்செயலாளர் ராகுல், பொருளாளர் சிவசங்கர், துணைத்தலைவர் கீதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்தப்போராட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை தமிழக அரசு கனிவுடன் பரிசீலித்து கூடிய விரைவில் நிறைவேற்றி தரவேண்டும். அரசுப்பணிகளில் ஒதுக்கீடு வழங்கி பொருத்தமான பணிகளை கண்டறிந்து, அவர்களுக்கு வழங்கவேண்டும். மேலும், தனியார் நிறுவனங்களிலும் மனிதாபிமான அடிப்படையில் இவர்களை பணிக்கு அமர்த்துவதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்