மாற்றுத்திறனாளிகள் திடீர் தர்ணா போராட்டம்
மாற்றுத்திறனாளிகள் திடீர் தர்ணா போராட்டம்
கோவை
கோவையில் உதவித்தொகை உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் திடீரென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
தர்ணா போராட்டம்
கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய வேலை வாய்ப்பு, தொகுப்பு வீடுகள் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர். அப்போது அவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து திடீரென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
இதையடுத்து போலீசார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனிடையே மாற்றுத்திறனாளிகள் போராட்டம் குறித்து தகவல் அறிந்ததும் கலெக்டர் சமீரன் குறைதீர்ப்பு கூட்டத்தில் இருந்து எழுந்து போராட்டம் நடைபெறும் இடத்திற்கு விரைந்து வந்தார். பின்னர் அவர் மாற்றுத்திறனாளிகளிடம் குறைகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது அவர்கள் கூறியதாவது:-
தொகுப்பு வீடுகள்
மாற்றுத்திறனாளிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். மேலும் மாற்றுத்திறனாளி களுக்கு குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடுகள் ஒதுக்கப்படும்போது மாடிகளில் ஒதுக்கின்றனர்.
இதனால் மாற்றுத்திறனாளிகள் அந்த வீடுகளில் குடியேற முடியாத நிலை உள்ளது. மேலும் தரைத்தளத்தில் வீடுகள் ஒதுக்கப்பட்டாலும், அந்த வீடுகளில் சாய்வு தளம் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் இல்லை. எனவே பழங்குடியின மக்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டித்தரப்படுவது போல், மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரே இடத்தில் தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும்.
மேலும் அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் பாலகங்கள் வைக்க அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. எனவே கோவையில் உள்ள அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் மூலம் ஆவின் பாலகங்கள் நடத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவையில் பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்கும் அளவிற்கு சிறப்பு பயிற்சி மையம் அமைக்க வேண்டும் என்றனர். அவர்களிடம் கலெக்டர் சமீரன் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.