உதவி உபகரணங்கள் பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

உதவி உபகரணங்கள் பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-06-04 19:05 GMT

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசால் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. உதவி உபகரணங்கள் பெற பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இதுவரை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் உதவி உபகரணங்கள் பெறாத மாற்றுத்திறனாளிகள் கீழ்கண்ட உதவி உபகரணங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதில் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்கள், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்கள், முதுகு தண்டுவடம் மற்றும் தசைசிதைவு நோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள், சக்கர நாற்காலிகள், மூளை முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு சக்கர நாற்காலிகள், 3 சக்கர சைக்கிள்கள், பார்வைத்திறன் மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய செயலிகளுடன் கூடிய செல்போன்கள், கால்களை இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை மற்றும் நவீன செயற்கை கால்கள், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மடக்கு ஊன்றுகோல்கள், இசை கெடிகாரங்கள் மற்றும் நவீன மடக்கு ஊன்றுகோல்கள், செவித்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் கால்கள் பாதிக்கப்பட்டு கைகள் நல்ல நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் பெற்றோர்களுக்கான தையல் எந்திரங்கள் வழங்கப்படவுள்ளது.

எனவே, தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், கல்வி மாற்று சான்றிதழ், ஆதார் அட்டைநகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-1 ஆகியவற்றுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், பெரம்பலூர் என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வருகிற 15-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண்ணான 04328-225474-ஐ தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்