திமுக அரசுக்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தகுந்த பாடத்தை அளிப்பார்கள் - ஜி.கே.வாசன்

திமுக ஆட்சியில் நல்ல திட்டங்களை எதிர்பார்த்த மக்களுக்கு தேர்தல் வாக்குறுதி ஏமாற்று வேலை என தெரிந்துவிட்டது என கூறியுள்ளார்.

Update: 2022-09-19 08:50 GMT

சேலம்,

மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். இதனைத் தொடர்ந்து ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

திமுக தேர்தல் வாக்குறுதியாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது. குறிப்பாக மின் கட்டணத்தை உயர்த்த மாட்டோம் என கூறியிருந்த நிலையில் தற்போது கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. மேலும் மாதந்தோறும் மின் அளவீடு நடத்தப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு அதனை செயல்படுத்தாமல் வரலாறு காணாத அளவிற்கு மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இது ஏழை எளிய மக்களுக்கு வேதனையை ஏற்படுத்தி உள்ளது

திமுக ஆட்சியில் நல்ல திட்டங்களை எதிர்பார்த்த மக்களுக்கு தேர்தல் வாக்குறுதி ஏமாற்று வேலை என தெரிந்துவிட்டது. தற்போது சொத்துவரியை பல மடங்கு உயர்த்தி உள்ளனர். கடந்த ஆட்சியின் போது திமுக சொத்து வரி உயர்த்தியதற்கு பல்வேறு கட்ட போராட்டத்தை நடத்தியது. தற்போது இரட்டை வேடம் போட்டுக்கொண்டு சொத்துவரியை உயர்த்தியது கண்டிக்கத்தக்கது. சொத்து வரி மட்டுமில்லாமல் பால் விலை, குடிநீர் வரி, வீட்டு வரி என அனைத்தையும் ஏற்றியுள்ளது வேதனை அளிக்கிறது. மக்கள் மீது அக்கறை இல்லாத அரசாங்கமாக வெளிப்படை தன்மை இல்லாமல் திமுக அரசு செயல்பட்டு வருகிறது.

சிறுவர்கள் முதல் பலரும் தற்போது போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். அந்த அளவிற்கு தமிழகத்தில் போதைப் பொருட்கள் அதிக அளவில் விற்பனை ஆகிறது. இந்தியாவிலேயே தமிழகம் முதல் இடம் பிடித்து போதை பொருளில் சாதனை படைத்துள்ளது. ஆன்லைன் விளையாட்டை தடை செய்ய இந்த அரசு தவறிவிட்டது. இதே போன்று தி.மு.க. அரசு செயல்பட்டால் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தகுந்த பாடத்தை அளிப்பார்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை.

விலை ஏற்றுவது தான் திராவிட மாடலா. வாக்குறுதி அடிப்படையில் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்கள். அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. மேலும் மக்களுக்கு சுமையை அதிகரிக்கிறீர்கள்.

எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒரு நிலைப்பாடு, ஆளுக்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு. இதுதான் திராவிட மாடலா. தமிழக மக்களை எளிதில் ஏமாற்றி விட முடியாது. ஊழலுக்கு திமுக திராவிட மாடல், நேர்மைக்கு காமராஜர் மாடல்தான் வேண்டும். கொரோனா தாக்கத்தை விட மின் கட்டண தாக்கம் மக்களை பெரும் அளவு பாதித்துள்ளது. மின் கட்டண உயர்வால் மின்கட்டணம் மட்டும் உயர்வதில்லை, வாடகை கட்டணம், பராமரிப்பு கட்டணம், வியாபார நிறுவனங்கள் பொருட்களின் விலையை உயர்த்துகிறார்கள், அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்ததுஎன பல்வேறு விலை உயர்வதற்கு காரணமாக மின் கட்டண உயர்வு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்