'தி.மு.க.வுக்கு சரியான நேரத்தில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்'

‘தி.மு.க.வுக்கு சரியான நேரத்தில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்’ என்று மத்திய மந்திரி எல்.முருகன் தெரிவித்தார்.

Update: 2023-10-19 20:15 GMT

'தி.மு.க.வுக்கு சரியான நேரத்தில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்' என்று மத்திய மந்திரி எல்.முருகன் தெரிவித்தார்.


விஸ்வகர்மா திட்ட முகாம்


கோவை பூ மார்க்கெட்டில் மத்திய அரசின் விஸ்வகர்மா திட்ட விழிப்புணர்வு மற்றும் கடன் வழங்குவதற்கான விண்ணப்ப முகாம் நடைபெற்றது. இதில் மத்திய மந்திரி எல்.முருகன் பங்கேற்று வியாபாரிகள் மத்தியில் பேசினார். பின்னர் கோவையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். முன்னதாக விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-


தமிழகத்தில் ஆண்டாண்டு காலமாக ஆயுத பூஜை, விஜயதசமி மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தமிழர்களுடைய வாழ்க்கையில் ஆயுத பூஜை என்பது மிக முக்கியமான பண்டிகை. அப்படிப்பட்ட ஆயுத பூஜையை அரசு அலுவலகங்களில் கொண்டாடக்கூடாது என்று தி.மு.க. அரசு அறிவித்திருக்கும் அறிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது ஒவ்வொரு தமிழர்களுடைய வழிபாட்டு உரிமையை புண்படுத்தும் விதமாக இருக்கிறது.


நாமக்கல் கவிஞர் பெயர்


நேற்று (நேற்று முன்தினம்) திருப்பூர் மருத்துவ கல்லூரியில் இருந்து இந்து தெய்வங்களின் படங்களை வைத்து ஆயுத பூஜை கொண்டாட கூடாது என்ற அறிக்கை வெளிவந்துள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை ஒழிப்போம் என கூறியதை நிறைவேற்றுவதாக இது உள்ளது. இந்த அறிக்கையை உடனடியாக திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால் தி.மு.க. ஆட்சிக்கும், முதல்-அமைச்சருக்கும், அமைச்சர்களுக்கும் சரியான நேரத்தில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்.


நாமக்கல்லில் புதிதாக கட்டப்பட்டுள்ள பஸ் நிலையத்திற்கு கலைஞர் பெயர் வைக்க தீர்மானம் போடப்பட்டுள்ளதாக தெரிகிறது. சுதந்திரத்துக்காக பாடுபட்ட நாமக்கல் கவிஞர் ராமலிங்கனாரின் பெயர் வைப்பது தான் சிறந்தது.


லியோ படம்


தமிழகம் முழுவதும் லியோ திரைப்படம் குறித்து பேசப்பட்டு வருகிறது. தி.மு.க. அரசு லியோ படக்குழுவினரை மிகவும் பாடாய் படுத்தி விட்டார்கள். ஒரு வழியாக படம் வெளிவந்துள்ளது.


கோவை குண்டு வெடிப்பு கைதிகளுக்கு கொடுக்கப்பட்ட தண்டனையை அவர்கள் முழுமையாக அனுபவிக்க வேண்டும்.


ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷம் வெற்றியின் அடையாளம். இதை மக்களின் உணர்வாகவே பார்க்க வேண்டும். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இதை அரசியலாக்க பார்த்து தோல்வி அடைந்துள்ளார்.


கால்நடை ஆம்புலன்ஸ்


தி.மு.க.வினர் அமைச்சர் அலுவலகத்திலும், அதிகாரிகளின் அலுவலகங்களிலும் சென்று அராஜகம் செய்கின்றனர். அரசாங்கத்தை இப்படித்தான் இயக்க வேண்டும் என அறிவாலயத்தின் கொள்கை பரப்பு செயலாளர்கள் போல அதிகாரிகள் செயல்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மீன்வளத்துறையை பொறுத்தவரை தமிழ்நாட்டிற்கு ரூ.1,800 கோடி வழங்கியுள்ளோம். மேலும் 300 கால்நடை ஆம்புலன்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. கூட்டணி குறித்து பா.ஜ.க.வின் அகில இந்திய தலைமை சரியான நேரத்தில் அறிவிக்கும். மகளிர் உரிமைத்தொகையை அனைவருக்கும் வழங்குவதாக கூறிவிட்டு தற்போது தி.மு.க.வினருக்கு மட்டுமே வழங்கி வருகின்றனர். எல்லா துறைகளிலும் தி.மு.க.வினர் மட்டுமே பலன்களை அனுபவித்து வருகின்றனர்.


இவ்வாறு அவர் கூறினார்.



Tags:    

மேலும் செய்திகள்