சாலை வசதி கோரி ரேஷன் கார்டுகளை தூக்கி வீசிய பொதுமக்கள்
புதுக்கோட்டையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சாலை வசதி கோரி மனு கொடுக்க வந்த பொதுமக்கள் ரேஷன் கார்டுகளை தூக்கி வீசினர். கூட்டத்தில் 340 மனுக்கள் பெறப்பட்டன.
சாலை வசதி
புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் கவிதாராமு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர். கறம்பக்குடி அருகே குளப்பன்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் மனு கொடுப்பதற்காக கலெக்டர் அலுவலகம் வந்திருந்தனர்.
தங்கள் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக சாலை வசதி இல்லை எனவும், சாலை வசதி கோரியும், தனிநபர் ஒருவரால் சாலைப்பணிகள் நடைபெறாமல் இருப்பதாகவும், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு கொடுக்க வந்திருந்தனர். இந்த நிலையில் மனு கொடுக்க வந்திருந்த பொதுமக்கள் ஆவேசமடைந்து தங்களுக்கு ரேஷன் கார்டு வேண்டாம் எனக்கூறி, அதனை தரையில் தூக்கி வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.
340 மனுக்கள்
இதற்கிடையில் இந்த பிரச்சினை தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற இருப்பதாகவும், அதில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து ரேஷன் கார்டுகளை எடுத்துக்கொண்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதேபோல பொதுமக்கள் பலர் பட்டா வசதி கோரி, உதவித்தொகை, ஆக்கிரமிப்பு அகற்றுதல் உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். கூட்டத்தில் மொத்தம் 340 மனுக்கள் பெறப்பட்டன. மனுவை பெற்ற கலெக்டர் அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
நலத்திட்டங்கள்
இலங்கை அரசின் மூலம் கைப்பற்றப்பட்டு, இலங்கையின் பல்வேறு கடற்படை தளங்களில் பயன்படுத்த இயலாத நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி வட்டத்தை சேர்ந்த 5 விசைப்படகு உரிமையாளர்களுக்கு முதல்-அமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து நிவாரணத் தொகை தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.25 லட்சத்திற்கான காசோலைகளை கலெக்டர் வழங்கினார்.
அன்னவாசல் கிராமம், புதுத்தெருவை சேர்ந்த சாகுல்ஹமீது மற்றும் அவரது மகன் முகமது சாலிக் ஆகியோர் நீரில் மூழ்கி இறந்தமைக்கு முதல்-அமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சத்திற்கான காசோலையினை, இறந்தவரின் குடும்பத்தினரிடம் வழங்கினார்.
தையல் எந்திரங்கள்
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.46,376 மதிப்பீட்டில் மோட்டார் பொருத்திய தையல் எந்திரங்களும் என ஆக மொத்தம் ரூ.27 லட்சத்து 46 ஆயிரத்து 376 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கருப்பசாமி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம், பொறுப்பு) கணேசன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுக்க சார்லஸ் நகரை சேர்ந்த ரேணுகா, அவரது கணவர் அன்புசெல்வம் மற்றும் அவர்களது 2 குழந்தைகளுடன் வந்தார். இந்த நிலையில் அன்புசெல்வம் தான் கேனில் கொண்டு வந்த பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை பாதுகாப்பு பணியில் இருந்த தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு நாகராஜ், உளவுப்பிரிவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலகுமார் ஆகியோர் தடுத்து நிறுத்தி உடனடியாக பெட்ரோல் கேனை கைப்பற்றினர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் கீரமங்கலம் அருகே செரியலூர் ஜெமீன் கிராமத்தில் தனது வீட்டின் முன்பு செல்லக்கூடிய பாதையை முள்வேலி போட்டு அடைத்திருப்பதாகவும், நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுப்பதற்காக வந்திருந்ததாகவும் தெரிவித்தார். அவரது கோரிக்கை மனுவை அதிகாரிகள் மூலம் நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தனர்.