சூரிய கிரகணத்தை சோலார் கருவி மூலம் பார்த்த மக்கள்
நெல்லையில் சூரிய கிரகணத்தை சோலார் கருவி மூலம் மக்கள் பார்த்தனர்.
நெல்லையில் சூரிய கிரகணத்தை சோலார் கருவி மூலம் மக்கள் பார்த்தனர்.
சூரிய கிரகணம்
சூரிய கிரகணம் நேற்று மாலையில் நிகழ்ந்தது. இதையொட்டி பல்வேறு இடங்களில் தொலைநோக்கி கருவி மூலம் சூரிய கிரகணத்தை ஏராளமானோர் பார்த்தனர்.
கிரகணம் முடிந்த பின்னரே கோவில்களில் பரிகார பூஜை நடத்தப்பட்டு கோவில் திறந்து சிறப்பு வழிபாடு மற்றும் வழிபாடுகள் நடந்தன. நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் சூரிய கிரகணத்தை பார்ப்பதற்கு சோலார் கருவி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதன் மூலம் சூரிய கிரகணத்தை ஏராளமானவர்கள் வந்து பார்த்து சென்றனர்.
நெல்லையப்பர் கோவில்
சூரிய கிரகணத்தையொட்டி நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் நேற்று மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. அதன் பிறகு சூரிய கிரகணம் முடிந்த பின் மாலை 6-35 மணிக்கு சந்திரசேகர், பவானி அம்பாளுக்கு கோவில் உள்ளே உள்ள பொற்றாமரை குளத்தில் தீர்த்தவாரியும், சிறப்பு பூஜையும், பரிகார பூஜையும் நடந்தது. இதைத்தொடர்ந்து கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் வழக்கமான பூஜைகள் நடந்தன.
மேலும் கந்த சஷ்டி விழா ஆரம்பமானதையொட்டி நெல்லையப்பர் கோவிலில் உள்ள ஆறுமுகநேரி சன்னதியில் நேற்று இரவில் சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கோவில்கள்
இதேபோல் பாளையங்கோட்டை சிவன் கோவில், தச்சநல்லூர் சிவன் கோவில், நெல்லை சந்திப்பு சாலை குமாரசாமி கோவில், குறுக்குத்துறை சுப்பிரமணியசாமி கோவில், மேலவாசல் சுப்பிரமணியசாமி கோவில், பேராத்துசெல்வியம்மன் உள்ளிட்ட கோவில்களில் நேற்று மாலை சூரிய கிரகணம் முடிந்த பின்னரே நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. சூரிய கிரகணம் முடிந்த பின்னர் ஏராளமானவர்கள் தாமிரபரணி ஆற்றில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். சூரிய கிரகணத்தை முன்னிட்டு பாபநாசம் கோவிலில் மதியம் 1 மணி முதல் இரவு 7 மணி வரை நடை அடைக் கப்பட்டது.