வியாழன் கோளை கண்டுகளித்த பொதுமக்கள்

திருச்சி அண்ணா அறிவியல் கோளரங்கில் நட்சத்திர விழா நடைபெற்றது. இதையொட்டி பொதுமக்கள் தொலைநோக்கி மூலம் வியாழன் கோளை கண்டுகளித்தனர்.

Update: 2023-01-07 19:44 GMT

திருச்சி அண்ணா அறிவியல் கோளரங்கில் நட்சத்திர விழா நடைபெற்றது. இதையொட்டி பொதுமக்கள் தொலைநோக்கி மூலம் வியாழன் கோளை கண்டுகளித்தனர்.

நட்சத்திர விழா

சூரியக்குடும்பத்தின் வியாழன் கோளை கி.பி. 1610-ம் ஆண்டு, ஜனவரி 7-ம் நாளில்தான் தலைசிறந்த வானியலாளர் கலிலியோ கலிலீ தனது தொலைநோக்கி மூலமாக ஆராய்ந்து, அதனை சுற்றி வரும் 4 நிலவுகளை முதன்முதலில் கண்டுபிடித்தார்.

இந்த முக்கியத்துவம் வாய்ந்த கண்டுபிடிப்பை கொண்டாடும் வகையில் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை மற்றும் மத்திய அரசின் விஞ்ஞான் பிரசார் ஆகியவற்றுடன் பல்வேறு அறிவியல் அமைப்புகள் இணைந்து ஜனவரி மாதம் மாநிலம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் நட்சத்திர விழாவை நடத்த உள்ளதாக அறிவித்து இருந்தன.

அதன்படி, தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை, தமிழ்நாடு வானியல் மற்றும் அறிவியல் கூட்டுறவு, மத்திய அரசின் விஞ்ஞான் பிரசார், அறிவியல் பலகை, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம், பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் மற்றும் எய்டு இந்தியா ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சி திருச்சி அண்ணா அறிவியல் மையம் மற்றும் கோளரங்க வளாகத்தில் நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கியது.

வியாழன் கோளை கண்டுகளித்த பொதுமக்கள்

திருச்சி அண்ணா அறிவியல் மையம் மற்றும் கோளரங்க திட்ட இயக்குனர் ஆர்.அகிலன் தலைமையில் முதுநிலை அறிவியல் உதவியாளர் ஜெயபால் மற்றும் பணியாளர்கள் தொலைநோக்கிகள் கொண்டு வியாழன் கோளையும், அதன் 4 நிலவுகளான அயு, யுரோப்பா, கேனிமேட், காலிஸ்டோ ஆகியவற்றை காண ஏற்பாடு செய்து இருந்தனர். நேற்று திருச்சியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் இரவு 7 மணி வரை கோள்களையும், நட்சத்திரங்களையும் காணமுடியவில்லை.

அதன்பின்னர் மேகங்கள் தெளிவானதை தொடர்ந்து வியாழன்கோளையும், அதன் 4 நிலவுகளையும் பொதுமக்கள் கண்டுகளித்தனர். இதில் திருச்சி மாவட்டம் மட்டுமின்றி பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து திருச்சி அண்ணா அறிவியல் மையம் மற்றும் கோளரங்க திட்ட இயக்குனர் ஆர்.அகிலன் கூறியதாவது:-

முதல் முறை

திருச்சியில் இதுபோல் 7 இடங்களில் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), நாளையும் (திங்கட்கிழமை) கோள்களை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு வகையான தொலைநோக்கிகள் மற்றும் பைனாக்குலர்கள் மூலமும், எளிய செயல்விளக்க கருவிகளை கொண்டு நிலா, கோள்கள், நட்சத்திரங்கள் ஆகியவற்றை கண்டு வானவியலை நன்கு அறிந்துகொள்ளும் விதத்தில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை வானின் பல நட்சத்திரக் கூட்டங்களையும் விளக்கிக்கூறும் விதத்தில் திட்டமிடப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் பங்கேற்க எந்தவித கட்டணமும் செலுத்த தேவையில்லை. இந்த நிகழ்ச்சியில் வானவியலில் ஆர்வம் உள்ளவர்கள், மாவட்ட வானியல் மன்றங்கள், உள்ளூர் வானியல் மன்றங்கள், வானியல் ஆர்வலர்கள் பங்கேற்கலாம். ஒரே நேரத்தில் தமிழகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இம்மாதிரி வானியல் திருவிழா நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்