தீபாவளி கொண்டாட முடியாமல் தவிக்கும் மக்கள்

கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்படும் தண்ணீர் அதிகரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் தீபாவளி பண்டிகையை வீடுகளில் கொண்டாட முடியாமல் முகாம்களில் உள்ள கிராம மக்கள் வேதனை அடைந்து உள்ளனர்.

Update: 2022-10-21 18:45 GMT

மேட்டூர் அணை மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்து வருவதால் கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக ஆற்றுப்படுகை கிராமங்கள் மற்றும் அந்த பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள்  அனைத்தும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு சேதம் அடைந்தது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கொள்ளிடம் அருகே படுகை கிராமங்களான நாதல்படுகை, முதலைமேடு திட்டு, வெள்ளமணல், பாலுரான் படுகை, மேலவாடி, வட ரங்கம், கோரைதிட்டு, காட்டூர் ஆகிய கிராமங்களை வெள்ளநீர் சூழ்ந்தது.

முகாம்களில் தங்க வைப்பு

இதனால் இந்த கிராமங்களில் இருந்த பொதுமக்கள் 4 ஆயிரம் பேர் கிராமங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு 9 முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் வருவாய்த்துறை சார்பில் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.

கிராம மக்களின் கால்நடைகளுக்கும், கால்நடைத்துறை சார்பில் உரிய தீவனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கொள்ளிடம் ஆற்றில் நேற்று முன்தினம் 1 லட்சத்து 13 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. நேற்று மேலும் குறைத்து கொள்ளிடம் ஆற்றின் வழியே 50 ஆயிரம் கன அடி தண்ணீர் சென்று பழையாறு மீன்பிடி துறைமுகம் அருகே கடலில் கலந்து வருகிறது.

தண்ணீர் வடிய தொடங்கியது

கொள்ளிடம் ஆற்றில் சென்று கொண்டிருக்கும் தண்ணீர் குறைந்து வருவதால் கரையோரத்தில் உள்ள நாதல் படுகை, முதலைமேடுதிட்டு, வெள்ளமணல் ஆகிய திட்டு கிராமங்களில் சூழ்ந்திருந்த தண்ணீர் மெல்ல, மெல்ல வடிய தொடங்கியுள்ளது. இந்தநிலையில் மேட்டூர் அணையில் இருந்து நேற்று முன்தினம் 90 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. நேற்று அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் ஒரு லட்சம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்படும் தண்ணீர் படிப்படியாக அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வீடுகளில் தீபாவளி கொண்டாட முடியாமல் வேதனை

இதனால் கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் தண்ணீர் வரத்து அதிகமாகி கொண்டிருப்பதால் தற்போது முகாம்களில் தங்கி உள்ளவர்கள் மீண்டும் தொடர்ந்து தங்கி இருக்க வேண்டிய கட்டாய நிலைக்கு ஆளாகியுள்ளனர். இதனால் திட்டு கிராம மக்கள் தீபாவளியை முகாம்களிலேயே கொண்டாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் மிகுந்த வேதனையில் இருந்து வருகின்றனர். மேலும் அங்குள்ள சாலைகள் முற்றிலும் சேதமடைந்துள்ளதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்

ஒன்றியக்குழு தலைவர் உதவி

கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் ஆற்று படுகை கிராமமக்கள் கரையில் தங்கி உள்ளனர். இரவு நேரங்களில் அப்பகுதி மக்கள் அச்சமின்றி தங்குவதற்கு தகரக்கொட்டகை மற்றும் மின்சார வசதி ஆகியவை செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், சேதமடைந்த சாலைகளையும் பார்வையிட்டார். பின்னர் கொள்ளிடம் ஆற்றின் கரையோர முகாம்களுக்கு தார்ப்பாய் வழங்கினார். அப்போது வேளாண்மை உதவி இயக்குனர் எழில்ராஜா விரிவாக்க அலுவலர்கள் பாலச்சந்தர், சவுந்தரபாண்டியன், ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ், துணைத் தலைவர் சிவப்பிரகாஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்