கிராம சபை கூட்டத்தில் இருந்து பொதுமக்கள் வெளிநடப்பு

சுடுகாட்டிற்கு செல்ல ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்காததை கண்டித்து மன்னார்குடி அருகே கிராம சபை கூட்டத்தில் இருந்து பொதுமக்கள் வெளிநடப்பு செய்தனர

Update: 2023-01-26 18:45 GMT

மன்னார்குடி:

சுடுகாட்டிற்கு செல்ல ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்காததை கண்டித்து மன்னார்குடி அருகே கிராம சபை கூட்டத்தில் இருந்து பொதுமக்கள் வெளிநடப்பு செய்தனர்.

கிராம சபை கூட்டம்

குடியரசு தின விழாவையொட்டி அனைத்து ஊராட்சிகளிலும் நேற்று கிராம சபை கூட்டங்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் நடைபெற்றது.

அதன்படி மன்னார்குடி ஊராட்சி ஒன்றியம் 3-ம்சேத்தி ஊராட்சி காசாங்குளம் கிராமத்தில், ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் தலைமையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள், பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பொதுமக்கள் வெளிநடப்பு

காசாங்குளம் மற்றும் கருவகுளம் ஆகிய கிராமத்திற்கான சுடுகாட்டிற்கு செல்ல ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட பல ஆண்டுகளாக கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியும், இதுவரை கட்டப்படவில்லை. இதனால் இறந்தவர்களின் உடலை ஆற்றில் இறங்கி சுமந்து செல்லும் அவல நிலை உள்ளதாகவும், ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்து தராததை கண்டித்தும், இளைஞர்கள், பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

பரபரப்பு

பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியபோது ஒரு மாதத்திற்குள் பாலம் கட்டும் பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததாக தெரிகிறது. இதனையடுத்து கிராம மக்கள் மீண்டும் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்