குடிநீருக்காக 1 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்லும் மக்கள்

குடிநீருக்காக 1 கிலோ மீட்டர் தூரம் மக்கள் நடந்து செல்கிறாா்கள்.

Update: 2023-05-23 18:45 GMT

விருத்தாசலம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில், நிலவும் மக்களின் பிரச்சினைகள் குறித்து வாரந்தோறும் வார்டுகள் வாரியாக பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று(புதன்கிழமை) 33-வது வார்டு மக்களின் பிரச்சினைகள் குறித்து பார்ப்போம்.

இந்த வார்டில் சாவடிக்குப்பம் மெயின் ரோடு, மயான வீதி, இரட்டைப்பாதை, பெண்ணாடம் சாலை, சித்தலூர் காலனி, அருணாசலம் நகர் உள்ளிட்ட பகுதிகள் அமைந்துள்ளன. இங்கு 911 ஆண்கள், 951 பெண்கள் என மொத்தம் 1862 வாக்காளர்கள் உள்ளனர்.

குடிநீர் பிரச்சினை

இந்த வார்டில் பெரும்பாலான சாலைகள் சேதமடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இரட்டைப்பாதை பகுதியில் தெரு மின்விளக்கு வசதிகள் இல்லாததால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பாம்புகள், விஷப்பூச்சிகள் நடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகிறார்கள்.

மேலும் இந்த பகுதியில் பல ஆண்டுகளாக குடிநீர் வசதி இல்லை. குடிநீருக்காக 1 கிலோ மீட்டர் தூரமுள்ள சாவடிக்குப்பத்திற்கு செல்கிறார்கள். அங்கு குடிநீரை பிடித்துக்கொண்டு நடந்தும், இருசக்கர வாகனங்களிலும் எடுத்து வருவதை காணமுடிகிறது.

பயன்படாத சுகாதார வளாகங்கள்

பெண்ணாடம் சாலையில் மழைநீர் வடிகால் வசதி இல்லாததால் குடியிருப்புகளையும், நகராட்சி தொடக்கப்பள்ளியையும் சுற்றி கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதில் கொசுக்கள் உற்பத்தியாகி மக்களுக்கு பல்வேறு நோய் பரவ காரணமாக அமைகிறது. சித்தலூரில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்காக சாவடிக்குப்பத்திற்கு சென்று வருகிறார்கள். எனவே சித்தலூரில் பகுதி நேர ரேஷன் கடை அமைத்து தர வேண்டும். சாவடிக்குப்பம், சித்தலூர், மற்றும் சித்தலூர் பெண்ணாடம் சாலை ஆகிய 3 இடங்களில் சுகாதார வளாகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை பராமரிப்பு இன்றியும், பயன்படாமலும் சிதலமடைந்து வருகிறது.

அருணாச்சலம் நகரில் நகராட்சி மூலம் குடிநீர் வினியோகிக்க வேண்டும் என்ற பிரதாரன கோரிக்கையை முன்வைக்கிறார்கள். நூலகம், விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என்று இளைஞர்களும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

மேலும் பொதுமக்கள் கூறிய கோரிக்கைகள் இதோ....

சுகாதாரத்தை உறுதி செய்ய...

சித்தலூர் குணசேகரன்:- கழிவுநீர் கால்வாய்களை தூர்வார வேண்டும். மயான ரோடு பிள்ளையார் கோவில் தெரு ஆகிய பிரதான தார் சாலையை சீரமைக்க வேண்டும். வார்டு முழுவதும் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. உடனடியாக கழிவுநீர் கால்வாய் வசதிகள் மற்றும் வடிகால் வசதிகள் அமைத்து பொதுமக்களின் சுகாதாரத்தை உறுதி செய்ய வேண்டும். சித்தலூரில் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும்.

குவியல், குவியலாக குப்பை

கருணாநிதிநகர் தனவேல்:- குப்பைக்கழிவுகள் முறையாக அகற்றப்படுவது இல்லை. ஆற்றில் குவியல் குவியலாக கொட்டப்பட்டு ஆங்காங்கே எரித்து விடப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் வார்டு முழுவதும் புகை மண்டலமாக உள்ளது. மயான ரோடு, மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் மழைநீர் வடிகால் வசதியுடன் கூடிய சாலை அமைத்து தர வேண்டும்.

பாதை ஆக்கிரமிப்பு

சாவடிக்குப்பம் பாலமுருகன்:- காந்திநகர் பகுதியில் இருந்து மயான பாதை செல்லும் சாலையில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை அகலப்படுத்தி தர வேண்டும். சலவை தொழிற்கூடம் பராமரிப்பின்றி உள்ளது. இதனால் அப்பகுதியில் தேங்கும் தண்ணீர், சலவைத் தொழில் கூடத்தை சுற்றிலும் நின்று வருவதால் துர்நாற்றம் வீசி வருகிறது. இந்த சலவை கூடத்தை முறையாக பராமரித்து சலவை தொழிலாளர்களின் நலனை காக்க வேண்டும். மூடிக்கிடக்கும் சுகாதார வளாகத்தை பராமரித்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

கவுன்சிலர் கூறுவது என்ன?

வார்டு கவுன்சிலர் பிரியா ஆனந்த் (அ.தி.மு.க.):- நம்பிக்கை நகரில் கழிவுநீர் கால்வாய் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மயான வீதியில் 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு உடைய குடிநீர் தொட்டி அமைக்கும் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. இதன் மூலம் வார்டு முழுவதும் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும். மயான வீதி, சாவடிக்குப்பம் சாலை விரைவில் செப்பனிடப்படும். சாவடிக்குப்பத்தில் சாலை அமைப்பதற்கு முன்பு கழிவுநீர் கால்வாய் அமைத்து தர வேண்டும் என்று நகராட்சி ஆணையாளரிடம் தெரிவித்துள்ளேன். பொதுமக்களின் அனைத்து கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும். 

Tags:    

மேலும் செய்திகள்