குறைந்த மின்னழுத்தம்; பொதுமக்கள் அவதி
குறைந்த மின்னழுத்தம் காரணமாக பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
நீடாமங்கலத்தில் பல்வேறு துறை சார்ந்த அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. கோர்ட்டு, பள்ளிகள், வங்கிகள், ரெயில் நிலையம், போலீஸ் நிலையமும் உள்ளது. பேரூராட்சி அந்தஸ்துடைய நீடாமங்கலம் பகுதியில் 20 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட சில்லறை வணிகம் உள்ளிட்ட கடைகள் உள்ளன. இந்த நிலையில் நீடாமங்கலம் பகுதியில் கடந்த சில நாட்களாக குறைந்த மின்னழுத்தம் நிலவுகிறது. இதன் காரணமாக மின்விசிறிகள் கூட சரியாக இயங்குவதில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள். இதுகுறித்து வணிகர் சங்க தலைவர் நீலன்.அசோகன் கூறுகையில், 'கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக மின் விசிறி குறைவான வேகத்தில் சுற்றுவதால், காற்று வீசாமல் மக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள். அடிக்கடி மின்தடையும் ஏற்படுகிறது. எனவே நீடாமங்கலம் பகுதிக்கு தடையில்லா மின்சாரம் வழங்கவும், மும்முனை மின்சாரமாக வழங்கவும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.