கடைவீதிகளில் பூஜை பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்

ஆயுத பூஜையையொட்டி கடலூரில் பூஜை பொருட்கள் வாங்க கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

Update: 2023-10-22 18:45 GMT

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஆயுத பூஜை இன்றும் (திங்கட்கிழமை), விஜயதசமி நாளையும் (செவ்வாய்க்கிழமை) சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதில் ஆயுத பூஜையையொட்டி சரஸ்வதிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம். அதேபோல் ஆயுத பூஜைக்கு மறுநாள் கொண்டாடப்படும் விஜயதசமி அன்று கல்வியை தொடங்கினால், சிறப்பாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.

அந்த வகையில் இந்தாண்டு ஆயுத பூஜையை கொண்டாட மக்கள் அனைவரும் தயாராகி விட்டனர். இதனால் பொதுமக்கள் பூஜைக்கு தேவையான பொருட்களை முன்கூட்டியே வாங்க தொடங்கினர். அதன்படி பூசணி, அவல், பொரி, கொண்டக்கடலை, பூ, பழங்கள் உள்ளிட்ட பூஜை செய்வதற்கு தேவையான அனைத்து விதமான பொருட்களையும் வாங்கி வருகின்றனர். இதன் காரணமாக கடலூரில் வண்டிப்பாளையம் சாலை, நேதாஜி சாலை, லாரன்ஸ் சாலை உள்ளிட்ட பகுதியில் உள்ள மார்க்கெட்டுகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

உழவர் சந்தை

இதேபோல் கடலூர் உழவர் சந்தை முன்பு பூசணிக்காய், பழம், காய்கறி, வாழைத்தார் உள்ளிட்டவை அதிகளவில் குவித்து வைக்கப்பட்டிருந்தது. மேலும் கடலூரை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்து விற்பனைக்காக நேற்று அதிகாலை 2 மணி முதலே அதிக அளவில் வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்டன. இதில் ஒரு கிலோ பூசணிக்காய் ரூ.15-க்கு விற்பனை செய்யப்பட்டது.

அதேபோல் பண்டிகை காலங்களில் எப்போதும் விலை அதிகரித்து காணப்படும் வாழைத்தார், வரத்து அதிகரிப்பால் நேற்று குறைந்த விலைக்கே விற்பனை செய்யப்பட்டது. அதாவது முன்பு பண்டிகை காலங்களில் அதிகபட்சமாக ரூ.400 முதல் ரூ.500 வரை விற்பனை செய்யப்படும் ஒரு வாழைத்தார் நேற்று ரூ.100 முதல் ரூ.150-க்கு தான் விற்பனையானது.

மேலும் சாதாரண நாட்களில் உழவர் சந்தையில் 15 முதல் 20 டன் வரை காய்கறிகள், பழங்கள் விற்பனையாகும். ஆனால் நேற்று ஆயுத பூஜைக்காக 25 டன் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்பட்டது.

மக்கள் கூட்டம்

இதேபோல் மளிகை கடைகளிலும் பூஜைக்குரிய பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததை காண முடிந்தது. பொதுமக்கள் ஒரே நேரத்தில் பூஜை பொருட்கள் வாங்க உழவர் சந்தை, வண்டிப்பாளையம் சாலை மற்றும் நேதாஜி சாலையில் உள்ள கடைவீதிகளில் குவிந்ததால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்