சுபமுகூர்த்த தினத்தால் கூடுதல் டோக்கன் வினியோகம்:சார்பதிவாளர் அலுவலகங்களில் குவிந்த மக்கள்

சுபமுகூர்த்த தினத்தையொட்டி கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்பட்டதால் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் இரவு 9 மணி வரை காத்திருந்து பதிவு செய்து சென்றனர்.

Update: 2023-10-18 18:45 GMT


ஐப்பசி முதல் நாள்

சுபமுகூர்த்த தினங்கள் எனக் கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் என்பதால், அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் (டோக்கன்) ஒதுக்கீடு செய்வது வழக்கம்.

அந்த வகையில், ஐப்பசி மாதத்தின் முதல் சுபமுகூர்த்த தினமான நேற்று அதிகளவில் பத்திரப்பதிவுகள் நிகழும் என்பதால், கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யுமாறு பல்வேறு தரப்பு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.

கூடுதல் டோக்கன்கள்

அதன் பேரில் தமிழ்நாடு அரசின் வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி, ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும், 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்களும், அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு டோக்கன்களும் வழங்கப்படும். 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களுக்கு கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு டோக்கன்களும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட வேண்டும் என பதிவுத்துறைக்கு உத்தரவிட்டார்.

மக்கள் கூட்டம்

அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், கடலூர், விருத்தாசலம் பகுதிகளை தலைமையிடமாக கொண்டு 9 சார் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இந்த அனைத்து அலுவலகங்களிலும் வழக்கமாக வழங்கப்படும் 100 டோக்கன்களுக்கு பதிலாக நேற்று 150 டோக்கன்கள் வழங்கப்பட்டது. இதனால் பத்திரப்பதிவுக்காக அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

மேலும் வழக்கத்தை விட கூடுதல் டோக்கன் வழங்கப்பட்டதால், பத்திரப் பதிவுக்கு மிகவும் காலதாமதமானது. இதனால் இரவு 9 மணி வரை காத்திருந்து பொதுமக்கள் பத்திரப்பதிவு செய்ததை காண முடிந்தது.

பல லட்சம் ரூபாய் வருவாய்

கடலூர் மாவட்டத்தில் ஒரே அலுவலகத்தில் 2 சார் பதிவாளர்கள் பணிபுரியாததால், 300 டோக்கன் எங்கும் வழங்கப்படவில்லை. மேலும் தட்கல் முன்பதிவு முறையும் கடலூர் மாவட்டத்தில் இதுவரை பின்பற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் மாவட்டத்தில் உள்ள 9 சார் பதிவாளர் அலுவலகங்கள் மூலம் நேற்று ஒரே நாளில் 1,350 டோக்கன் வினியோகம் செய்யப்பட்டுள்ளதால், அரசுக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்