அடிப்படை வசதிகளின்றி அவதிப்படும் பொதுமக்கள்
அடிப்படை வசதிகளின்றி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.;
ஜெயங்கொண்டம்:
அடிப்படை வசதிகள் இல்லை
அரியலூர் மாவட்டம், தண்டலை ஊராட்சி ஒன்றியம், வடவீக்கம் அருந்ததியர் தெரு பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தண்ணீர் வசதி, கழிவுநீர் வடிகால் வசதி, போதிய மின்சார வசதி போன்ற அடிப்படை வசதிகள் முறையாக செய்து தரப்படவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் அந்த தெருவிற்கு செல்லும் வழியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாலம், தற்போது பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. தெருவில் 2 புறங்களிலும் ஓடை செல்வதால், அதன் வழியாக விஷ ஜந்துகள் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது.
சிதிலமடைந்த தொகுப்பு வீடுகள்
மேலும் மழைக்காலங்களில் ஓடைகளில் வரும் தண்ணீர் வீடுகளுக்குள் புகுவதால், அப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். அதேபோன்று தெருவில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டி சேதமடைந்து பயனற்ற நிலையில் உள்ளது. இதனால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சென்று குடிநீர் கொண்டு வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
மேலும் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு அரசு சார்பில் கட்டிக்கொடுக்கப்பட்ட தொகுப்பு வீடுகள் மிகவும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. வீட்டின் உள்பகுதியில் மேற்கூரை சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுவதுடன், கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் சிலர் தொகுப்பு வீட்டின் முன் பகுதியில் சாரம் அமைத்து, அதில் குடியிருக்கும் நிலை உள்ளது. எனவே இப்பகுதியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதோடு, தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-
சீரமைக்க வேண்டும்
குடும்பத்தலைவி சின்னப்பொண்ணு:- கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் 10 தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டன. தற்போது அந்த வீடுகளில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுகின்றன. சமைக்கும் போதும், சாப்பிடும் போதும் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து சாப்பாட்டில் விழுந்து விடுகின்றன. இதனால் வீட்டுக்கு வெளியே சமைத்து, சாப்பிடும் நிலையில் உள்ளோம். எனவே அந்த வீடுகளை சீரமைத்து கொடுக்க வேண்டும். மேலும் தெரு முனையில் உள்ள பாலத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய பாலத்தை கட்டித்தர வேண்டும். தெருக்களில் இருபுறமும் வடிகால் வாய்க்கால் அமைக்க வேண்டும். பெயர்ந்த நிலையில் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ள சிமெண்டு சாலையை சீரமைக்க வேண்டும். மேலும் தெருக்களில் மின்விளக்குகள் அமைத்து தர வேண்டும்.
வடிகால் வாய்க்கால் இல்லை
அப்பகுதியை சேர்ந்த ராஜா:- மழைக்காலங்களில் பாலத்தின் வழியாக வரும் மழை வெள்ளமும், மங்களம் ஏரி, பொன்னம்பலம் ஏரி, வரட்டேரி, நீராழிக்குட்டை உள்ளிட்ட 9 ஏரிகளில் இருந்து வரும் மழைநீர், ஏரி உபரிநீர் ஓடைகளில் இருந்து வெளியேறி மழைக்காலங்களில் எங்கள் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. மீதமுள்ள நீரே அருகில் உள்ள பெரிய ஏரிக்கு சென்றடைகிறது. இதனால் முறையான வடிகால் வாய்க்கால்கள் இல்லாத காரணத்தாலும், மழை வெள்ளம் வடியாத காரணத்தாலும் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் ஏற்படுகிறது. மேலும் கழிவுநீர் செல்ல வாய்க்கால் இல்லாத காரணத்தால் சாலை ஓரங்களில் அங்காங்கே மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது.
குடிநீர் பிரச்சினை
கூலித்ெதாழிலாளிகள் மணிவேல், சேட்டு:- தெருக்களில் போதிய தெரு விளக்குகள் இல்லை. மேலும் இப்பகுதியில் விஷ ஜந்துகள் நடமாட்டம் உள்ளது. இதனால் முதியவர்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் அச்சப்பட்டு மாலை 6 மணிக்கு மேல் வெளியே வராமல் வீட்டிலேயே இருந்து வருகின்றனர். குறைந்த அழுத்த மின்சாரத்தால் வீட்டில் சிம்னி விளக்கு போல் பல்பு எரிகிறது. எனவே மின் விளக்குகளை அணைத்துவிட்டு, மண்எண்ணெய் விளக்குகளை பயன்படுத்துவதால், மீண்டும் பழைய காலத்திற்கு திரும்பியுள்ளோம். குடிநீர் பிரச்சினை பெரும் பிரச்சினையாக உள்ளது. குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டும் மின் மோட்டார் இயங்க போதிய மின்சாரம் இல்லை. மேலும் மோட்டாரும் பழுதடைந்து, தற்போது அந்த தொட்டி மூலம் தண்ணீர் பிடிக்க முடியாத சூழல் ஏற்பட்டு, குடிநீருக்காக நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
போக்குவரத்து தடை
அப்பகுதியை சேர்ந்த சதாசிவம்:- இந்த தெரு பகுதியில் உள்ள பாலத்தின் உறுதித்தன்மை குறைந்துவிட்டது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து தடைபட்டுவிட்டது. அவசர காலத்தில் 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாக னங்களும் அந்த வழியாக வருவதற்கு தயக்கம் காட்டுவதால், உடல் நலக்குறைவு ஏற்பட்ட முதியவர்கள் உள்ளிட்டோரை தூக்கிச்சென்று மெயின் ரோட்டில் உள்ள 108 ஆம்புலன்சில் ஏற்றும் நிலை உள்ளது. அவ்வாறு தூக்கிச் செல்வதற்குள் உயிரிப்பு ஏற்பட்ட சம்பவமும் நடந்துள்ளது. தொகுப்பு வீடுகள் மிகவும் சிதிலமடைந்த நிலையில் உள்ளன. வீட்டின் உள்ளே இருக்கும்போது, எந்த நேரத்திலும் இடிந்து விழுந்து விடுமோ? என்ற அச்சத்துடனேயே வாழும் நிலை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்கள்.