புகை மண்டலத்தால் அவதிப்படும் மக்கள்
வாகன கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் புகை மண்டலத்தால் அவதிப்பட்டு வருகின்றனர்.
வேலூர் பைபாஸ் சாலை ரெயில்வே மேம்பாலத்தை சுற்றி சேப்பாக்கம், கன்சால் பேட்டை ஆஞ்சநேயர் கோவில் தெரு, இந்திராநகரில் மக்கள் வசித்து வருகின்றனர். பைபாஸ் சாலை ஓரங்களில் கனரக வாகனங்கள் பழுது பார்க்கும் கடைகள் பல உள்ளன. பழுதான வாகனங்களில் இருந்து பிரித்து எடுக்கப்படும் பயன் இல்லாத உதிரிபாக கழிவுகள், டயர்கள், பிளாஸ்டிக் பொருட்களை ரெயில்வே மேம்பாலத்தின் அருகே கொட்டி தினமும் தீவைத்து எரிக்கின்றனர். இதனால் ஏற்படும் கரும் புகை, காற்றில் பரவி பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. நேற்று மாலையில் கொளுத்தப்பட்ட நெருப்பில் இருந்து ஏற்பட்ட கரும்புகை பழைய பஸ்நிலையம் வரை பரவி பாதிப்பை ஏற்படுத்தியது.
வாகன கழிவுகளை பாதுகாப்பான முறையில் அகற்றி அப்புறப்படுத்த மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.