பல்லாங்குழி சாலையால் பரிதவிக்கும் மக்கள்
கிணத்துக்கடவு அருகே பல்லாங்குழி சாலையால் மக்கள் பரிதவித்து வருகின்றனர்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே பல்லாங்குழி சாலையால் மக்கள் பரிதவித்து வருகின்றனர்.
மாற்றுப்பாதை திட்டம்
பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு செல்லும் வகையில் கிராமங்கள் வழியாக மாற்றுப்பாதை அமைக்க நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டது. இதையொட்டி கிணத்துக்கடவு அருகே கோவில்பாளையம், மேட்டுப்பாளையம் பிரிவு, காணியாலாம்பாளையம், முள்ளுப்பாடி, நல்லட்டிபாளையம், கோடங்கிபாளையம், கோதவாடி, கொண்டம்பட்டி, அரசம்பாளையம், மயிலேறிபாளையம் ஆகிய இடங்களில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்றது.
இந்த மாற்றுப்பாதை அமைக்கும் திட்டம் செயல்பாட்டுக்கு வருவதால், மேற்கண்ட கிராமங்களில் உள்ள சாலைகளில் சீரமைப்பு பணிகள் நடைபெறாமல் இருந்தது.
குண்டும், குழியுமாக...
இந்த நிலையில் திடீரென அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இதனால் முள்ளுப்பாடி, பட்டணம், நல்லட்டிபாளையம், கோடங்கிபாளையம், கொண்டம்பட்டி, அரசம்பாளையம் ஆகிய பகுதியில் உள்ள சாலைகள் சீரமைக்கப்படாமல், பல இடங்களில் பல்லாங்குழி போன்று குண்டும், குழியுமாக கிடக்கிறது. சில இடங்களில் தார்சாலை இருந்த இடமே தெரியாத வகையில், சேதம் அடைந்து காணப்படுகிறது.
குறிப்பாக கொண்டம்பட்டி, காரச்சேரி, சொலவம்பாளையம், அரசம்பாளையம் ஆகிய 4 கிராமங்களின் சாலை சந்திக்கும் பகுதியில் இருந்து மயிலேறிபாளையம் செல்லும் வழியில் தரைமட்ட பாலம் உடைந்து குழி விழுந்துள்ளது. அதில் வாகனங்கள் சிக்கி விடாமல் இருக்கும் வகையில் டயர்களை போட்டு வைத்துள்ளனர். இதனால் பரிதவிக்கும் நிலை உள்ளது.
சீரமைக்க வேண்டும்
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
அரசம்பாளையம் வழியாக கோவைக்கு மாற்றுப்பாதை அமைக்கப்படுவதாக நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர். அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிவடைந்த நிலையில், திடீரென திட்டத்தை கைவிட்டுவிட்டதாக கூறுகின்றனர். இந்த திட்டத்தை நம்பி சாலைகளை கூட சீரமைக்காமல் வைத்திருந்தனர். தற்போது ஆங்காங்கே குழி ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து காரச்சேரி கிராம சபை கூட்டத்தில் கலெக்டரிடம் புகார் தெரிவித்தோம். அவர், நெடுஞ்சாலைத்துறையினருக்கு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். ஆனால் இதுவரை சாலை சீரமைப்பு பணி தொடங்கவில்லை. இதனால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் தினமும் அவதிப்பட்டு வருகிறார்கள். சில நேரங்களில் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே மாற்றுப்பாதை திட்டத்தை தொடங்காவிட்டாலும், சாலைகளை சீரமைத்து தர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.