வாய்க்கால் உடைந்து வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி

அதிராம்பட்டினத்தில் வாய்க்கால் உடைந்து வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-08-07 20:10 GMT

அதிராம்பட்டினம்:

அதிராம்பட்டினத்தில் வாய்க்கால் உடைந்து வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாய்க்கால் உடைந்தது

அதிராம்பட்டினம் நகராட்சியில் பஸ் நிலையத்தில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் பள்ளங்கள் தோண்டப்பட்டு சாலை விரிவாக்க பணி நடைபெற்று வந்தது.

பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள அரசு பள்ளிக்கு அருகே கழிவுநீர் வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் கடந்த சில மாதங்களாக உடைந்து சேதமடைந்து உள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேறி, அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்குள் கழிவு நீர் புகுந்து வருவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

வீடுகளுக்குள் புகும் கழிவுநீர்

குடியிருப்பு பகுதிக்குள் கழிவுநீர் புகுவதால் அந்த பகுதி மக்களுக்கு தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளது. சேதமடைந்த கழிவு நீர் வாய்க்காலை சீரமைக்க வேண்டும் என நகராட்சி அதிகாரியிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் சக்தி என்பவர் கூறுகையில் எங்கள் பகுதியில் உள்ள வடிகால் வாய்க்கால் நீண்ட காலமாக சீரமைக்கப்படாமல் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் கழிவு நீர் தொடர்ந்து வெளியேறி எங்கள் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது.

தொற்று நோய்கள்

இதன்காரணமாக இப்பகுதியில் அதிக அளவில் கொசு உற்பத்தியாகி மக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் நிலை உள்ளது. கழிவு நீரில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே மாவட்ட நிர்வாகம் வீடுகளுக்குள் புகுந்த கழிவு நீரை வெளியேற்றி, வாய்க்காலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்