கொசு தொல்லையால் மக்கள் அவதி

திருக்கோவிலூர் நகராட்சி பகுதியில் கொசுதொல்லையால் அவதி அடைந்து வரும் மக்கள், கொசுக்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்

Update: 2023-08-09 18:45 GMT

திருக்கோவிலூர்

பகல் நேரங்களிலும்

திருக்கோவிலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் கடந்த சில வாரங்களாகவே கொசு தொல்லை அதிகரித்து வருகிறது. தேங்கி நிற்கும் கழிவுநீரில் கொசுக்கள் இருப்பதை காண முடிகிறது. இரவு நேரம் மட்டுமின்றி பகல் நேரங்களிலும் கொசுக்கள் கடிப்பதால் எங்கே டெங்கு காய்ச்சல் வந்து விடுமோ என்ற அச்சம் பொதுமக்களிடம் உள்ளது. மேலும் யானைக்கால், மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. கொசுவிரட்டி, கொசுவலை, கொசு பேட் போன்றவற்றை பயன்படுத்திதான் வீடு மற்றும் அலுவலகங்களில் இருக்க வேண்டிய நிலை உள்ளதாக பொதுமக்கள் புகார் தொிவிக்கின்றனர்.

இந்த நிலையில் திருக்கோவிலூர் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். எனவே நகராட்சியில் கொசு தொல்லையை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதார துறையினர் தூய்மை பணி மற்றும் கொசுமருந்து அடிக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கட்டுப்படுத்த வேண்டும்

இது குறித்து பொதுமக்கள் கூறும்போது முன்பெல்லாம் மாலை மற்றும் இரவு நேரங்களில்தான் கொசுத்தொல்லை இருக்கும். ஆனால் இப்போது பகல் நேரங்களிலேயே கொசுக்கள் கடிக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் நகராட்சி பகுதியில் ஆங்காங்கே தேங்கி நிற்கும் கழிவுநீர்தான். இதில் தான் கொசுக்கள் முட்டையிட்டு இனத்தை பெருக்குகிறது. பின்னர் அவை நன்கு வளர்ந்ததும் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் படையெடுத்து வருகின்றன. சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவரையும் கடித்து துன்புறுத்துகிறது. எங்கே டெங்கு உள்ளிட்ட கொடிய நோய்கள் வந்துவிடுமோ என்ற அச்சம் உள்ளது.

இதனால் கொசுக்களை விரட்ட கொசுவலை, கொசுபேட், லிக்யூட் போன்ற கொசுவிரட்டிகள் வாங்கு வதற்காகவே மாதந்தோறும் ஒரு தொகையை ஒதுக்க வேண்டி உள்ளது. சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்போம் என்ற வாய்மொழியாக சொன்னால் மட்டும்போதாது. அதை தூய்மையாக வைக்க செய்ய வேண்டிய வேலையை செய்பவர்கள் முறையாக செய்ய வேண்டும். எனவே நகராட்சி நிர்வாகம் கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்