சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரால் பொதுமக்கள் அவதி
அரியலூர் புது மார்க்கெட் தெருவில் சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரால் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள்.;
அரியலூர் மாவட்டம் வாலாஜா நகரம் ஊராட்சியில் புது மார்க்கெட் தெருவில் ஏராளமானோர் வசித்து வருகிறார்கள். இங்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கழிவு நீர் வாய்க்கால் கட்டப்பட்டு தார் சாலை போடப்பட்டன. சாலையை விட கழிவுநீர் வாய்க்கால் சுமார் ஒரு அடி உயரத்திற்கு கட்டப்பட்டிருந்தது. இதனால் சாலையில் தேங்கி நிற்கும் மழைநீர், கழிவு நீர் வாய்க்காலில் செல்ல முடியவில்லை. இந்தநிலையில் கழிவுநீர் வாய்க்காலில் மண் சேர்ந்து வாய்க்காலில் தரைத்தளம் உயர்ந்து விட்டது. இதனால் பல்வேறு இடங்களில் சாலைகளில் கழிவுநீர் வெளியே வருகிறது. இந்தநிலையில் மழை பெய்தால் அனைத்து சாலைகளும் தண்ணீர் தேங்கி நிற்கின்றன. இதனால் அந்த சாலையில் நடந்தும், இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரை வாய்க்காலில் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.