குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவதால் பொதுமக்கள் அவதி
விழுப்புரம் ஜி.ஆர்.பி. தெருவில் குடிநீரில் சாக்கரை நீர் கலந்து வருவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
விழுப்புரம் ஜி.ஆர்.பி. தெருவில்
குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவதால் பொதுமக்கள் அவதி
விழுப்புரம், ஆக.13-
விழுப்புரம் ஜி.ஆர்.பி. தெருவில் குடிநீரில் சாக்கரை நீர் கலந்து வருவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
4 நாட்களாக
விழுப்புரம் நகராட்சி 13-வது வார்டுக்குட்பட்ட ஜி.ஆர்.பி. தெருபகுதியில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நகராட்சி சார்பில் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் அந்த குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு குடிநீருடன் சாக்கடை நீர் கலந்து வருகிறது. கடந்த 4 நாட்களாக குடிநீர் அசுத்தம் நிறைந்து வருவதால் அதனை அப்பகுதி பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அந்த நீரை இதர அத்தியாவசிய தேவைக்கும் பயன்படுத்த முடியாததால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
நடவடிக்கை எடுக்கவில்லை
இதுபற்றி சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 4 நாட்களாகியும் அதை சரிசெய்ய நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி மக்கள் குடிநீருக்காக காலி குடங்களை தூக்கிக்கொண்டு பழைய பஸ் நிலையம் மற்றும் புதிய நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள பொது குடிநீர் குழாயடிக்கு சென்று தண்ணீர் பிடித்து வரும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இருப்பினும் போதுமான குடிநீர் கிடைக்காமல் அப்பகுதி மக்கள் அல்லல்பட்டு வருகின்றனர். எனவே நகராட்சி அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு உடைப்பு ஏற்பட்ட குடிநீர் குழாயை உடனடியாக சரிசெய்து சுகாதாரமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.