கொளுத்தும் வெயிலால் பொதுமக்கள் அவதி

கோடைகாலம் முடிந்த நிலையிலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் கொளுத்தும் வெயிலால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

Update: 2023-09-28 18:45 GMT

சாயல்குடி, 

கோடைகாலம் முடிந்த நிலையிலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் கொளுத்தும் வெயிலால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

கொளுத்தும் வெயில்

தமிழகத்தில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் கோடை வெயில் தொடங்கி ஜூன் மாதத்துடன் முடிந்துவிடும். ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதத்தில் கோடை வெயில் தொடங்கியது. மே மாத இறுதியில் அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னர் ஜூன், ஜூலை மாதத்தில் இருந்து வெயிலின் தாக்கம் ஓரளவு குறைந்து காற்று வீச தொடங்கிவிடும். மேலும் அவ்வப்போது மழையும் பெய்ய தொடங்கிவிடும்.

இந்தாண்டு மாவட்டத்தில் கோடைகாலம் முடிந்து 3 மாதங்களை கடந்த பின்னரும் வெயிலின் தாக்கம் தற்போது வரை குறையவில்லை. ராமநாதபுரம், சாயல்குடி, வாலிநோக்கம், சிக்கல், ஏர்வாடி, கீழக்கரை, முதுகுளத்தூர், பரமக்குடி, ஆர்.எஸ்.மங்கலம், உப்பூர், திருவாடானை உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊர்களிலுமே வெயிலின் தாக்கம் தற்போது வரை கடுமையாக உள்ளது.

மழை பெய்யுமா

வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருவதால் பகல் நேரங்களில் பெண்கள் முதல் வயதானவர்கள் வரை கையில் குடையுடனும், துணியால் தலையை மூடியபடியும் தான் சாலைகளில் நடந்து செல்கின்றனர். சாலையில் கானல் நீர் தெரியும் அளவுக்கு வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

மேலும், மாவட்டத்தில் மழை பெய்யாததால் கண்மாய், ஊருணி உள்ளிட்ட நீர்நிலைகளும் தண்ணீரின்றி வறண்டு விட்டன. விரைவில் பருவமழை தொடங்கி வெப்பம் தணிய போதிய மழை பெய்யுமா? என பொதுமக்களும், விவசாயிகளும் எதிர்பார்த்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்