வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதி

வேலூரில் நேற்று பலத்த மழை பெய்ததால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்

Update: 2023-09-23 16:57 GMT

பலத்த மழை

வேலூரில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் பிற்பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 4 மணி அளவில் வேலூரில் சில இடங்களில் சாரல் மழை பெய்தது. தொடர்ந்து பலத்த மழையாக உருவெடுத்தது. சுமார் ஒரு மணி நேரம் மழை வெளுத்து வாங்கியதால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு சென்றனர்.

அவர்கள் சாலையோரம் இருந்த கடைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் கீழ் ஒதுங்கி நின்றனர். தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. தொடர்ந்து சாரல் மழையாகவும், பலத்த மழையாகவும் இடி, மின்னலுடன் மாறி மாறி பெய்தது.

வீடுகளுக்குள் தண்ணீர்

சத்துவாச்சாரி வசந்தம் நகர் பகுதியில் உள்ள முதல் தெருவில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். பாத்திரங்களை வைத்து தண்ணீரை வெளியேற்றினர். அந்த தெருவில் போதிய கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை என்று அவர்கள் குற்றம் சாட்டினர்.

மேலும் அவர்கள் கூறுகையில், மழைக்காலங்களில் தொடர்ந்து இதேபோன்று தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. தண்ணீர் தேங்குவதால் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தெருக்களில்...

மேலும் மழையின் காரணமாக சத்துவாச்சாரி தாட்கோ நகர், அன்பு நகர் பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியது. வேலூர் டவுன் ரெயில் நிலையம் அருகே உள்ள சம்பத் நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தெருக்களில் தண்ணீர் தேங்கியது.

இரவிலும் தொடர்ந்து மழைபெய்தது. இதனால் பொதுமக்கள் பலர் வீடுகளை விட்டு வெளியே வராமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர். இந்த மழையின் காரணமாக இரவு முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.

Tags:    

மேலும் செய்திகள்