முழுமை பெறாத நடைமேம்பாலங்களால் பொதுமக்கள் அவதி
முழுமை பெறாத நடைமேம்பாலங்களால் பொதுமக்கள் அவதி
திருப்பூர்
திருப்பூர் மாநகர பகுதியில் பொதுமக்கள் சாலைகளை எளிதாக கடக்கும் வகையில் ஆங்காங்கே நடைமேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான பணிகள் முழுமையடையாமல் இருப்பதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
நடைமேம்பாலங்கள்
திருப்பூர் மாநகரில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. இதனால் பெரும்பாலான ரோடுகளில் வாகனப்போக்குவரத்து அதிக அளவில் உள்ளது. இதேபோல் அவினாசி ரோடு, குமரன் ரோடு, பல்லடம் ரோடு, தாராபுரம் ரோடு, காங்கேயம் ரோடு, மங்கலம் ரோடு, ஊத்துக்குளி ரோடு என பிரதான ரோடுகளில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து சென்றவண்ணம் உள்ளன. இதில் அதிக பொதுமக்கள் நடமாட்டம் உள்ள ரோடுகளில் அவர்கள் எளிதாக சாலையை கடந்து செல்வதற்கு வசதியாக நடைமேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது ரெயில் நிலையம்-தலைமை தபால் நிலைய சந்திப்பு பகுதியில் ஒரு நடைமேம்பாலமும், டவுன்ஹால் அருகே, பார்க் ரோடு, நல்லூர் ஆகிய இடங்களில் நடைமேம்பாலங்கள் அமைக்கப்பட்டு அவை தற்போது மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. குறிப்பாக இதில் ரெயில் நிலையம், டவுன்ஹால் ஆகிய பகுதிகளில் உள்ள பாலங்களை பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
பொதுமக்கள் அவதி
இப்படிப்பட்ட நிலையில் ரெயில் நிலையம், பார்க் ரோடு, நல்லூர் ஆகிய பகுதிகளில் உள்ள பாலங்களில் மட்டும் பணி முழுமை பெற்றுள்ளது. ஆனால், டவுன்ஹால் பகுதியில் உள்ள பாலத்திற்கு மேற்கூரை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இரும்பினால் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலம் மழையில் நனைந்து துருபிடிக்கும் வாய்ப்பு உள்ளது. இதேபோல் புஷ்பா ரவுண்டானா பகுதியில் ரோட்டின் ஒரு பகுதியில் மட்டும் பாலம் அமைக்கப்பட்டு பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் பாலம் அந்தரத்தில் நிற்கிறது. இதன்காரணமாக பொதுமக்கள் இந்த பாலத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இங்கு ரெயில் நிலையம் அருகில் இருப்பதால் இந்த பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் மக்கள் நடமாட்டம் மிகவும் அதிகமாக இருக்கும். மாணவ, மாணவிகளும் அதிக அளவில் வருவார்கள். அதுமட்டுமின்றி இ்ங்கு எப்போதும் வாகனங்கள் பரபரப்பாக வந்து சென்றவண்ணம் இருக்கும். இதனால் இப்பகுதியில் பொதுமக்கள் சாலையை கடப்பது மிகவும் சவாலான விஷயமாக இருக்கும். இப்படிப்பட்ட நிலையில் இங்கு பாலம் அந்தரத்தில் இருப்பதால் சாலையை கடக்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
பணி முழுமையடையுமா?
எனவே, இங்கு கிடப்பில் போடப்பட்டுள்ள பாலம் அமைக்கும் பணியை மீண்டும் தொடங்கி விரைவில் பாலத்ைத கட்டி முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். இதேபோல் மேற்கூரை இல்லாத இடங்களில் மேற்கூரை அமைத்தும் பாலத்தின் பணிகள் முழுமையடைவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். இதேபோல், மாநகரின் பிற பகுதிகளிலும் அதிக வாகனப்போக்குவரத்து உள்ள இடங்களை ஆய்வு செய்து அங்கும் நடைமேம்பாலங்கள் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். இது ஒருபுறமிருக்க, ரெயில் நிலையம் அருகே உள்ள பாலத்தை சிலர் மது அருந்தும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பாலத்தில் பிளாஸ்டிக் தம்ளர்கள், காலி மதுபாட்டில்கள் கிடக்கின்றன. மேலும், பொதுமக்கள் நடந்து செல்வதற்கு இடையூறு ஏற்படும் வகையில் பாலத்தில் சிலர் படுத்து கிடக்கின்றனர். எனவே பாலத்தின் தூய்மையை பாதுகாக்கவும், பொதுமக்கள் பாதுகாப்பான வகையில் சாலையை கடப்பதற்கும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?.
(படங்கள் உண்டு).