பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள் பயன்படுத்தக்கூடாது

நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்க பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்று கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.

Update: 2022-10-02 18:45 GMT

ஊட்டி, 

நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்க பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்று கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.

கிராம சபை கூட்டம்

ஊட்டி அருகே எப்பநாடு ஊராட்சி சமுதாயக்கூடத்தில் கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம் மற்றும் திட்டப்பணிகள் குறித்தும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்ட கணக்கெடுப்பு மற்றும் இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து கலெக்டர் அம்ரித் பேசியதாவது:-

எப்பநாடு ஊராட்சியில் மின்சார வசதி வேண்டியும், குடிநீர், கழிப்பிடம், சாலை போன்ற அடிப்படை வசதிகள் கோரியும் கோரிக்கைகளை பொதுமக்கள் வைத்தனர். இதுகுறித்து கள ஆய்வு செய்து வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதனை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

மனுக்கள் பெறப்பட்டன

ஒவ்வொரு துறை அலுவலர்களும், உள்ளாட்சித்துறை அலுவலர்களும் அரசு அறிவித்துள்ள திட்டங்களை பொதுமக்களிடையே கொண்டு செல்ல உறுதுணையாக இருக்க வேண்டும். நீலகிரியின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் கிராமப்புற மக்களாகிய நீங்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதையடுத்து பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயராமன், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் (பொறுப்பு) ஷிபிலா மேரி, ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், மாவட்ட வழங்கல் அலுவலர் குதுரதுல்லா, ஆர்.டி.ஓ. துரைசாமி, உதவி இயக்குநர் சாம்சாந்தகுமார், குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் ஷோபனா, எப்பநாடு ஊராட்சி தலைவர் சிவக்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்