நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் கலெக்டர் முருகேஷ் கூறினார்.

Update: 2022-08-26 11:59 GMT

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் கலெக்டர் முருகேஷ் கூறினார்.

விவசாயிகள் குறை தீர்வு கூட்டம்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

குறை தீர்வு நாள் கூட்டத்தில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பேசி முடிப்பதற்கே மதியம் 1 மணி ஆகி விடுகிறது. இதையடுத்து விவசாயிகளிடம் தனி நபர் கோரிக்கை மனுகள் பெறப்படுகிறது.

இறுதியாக பெறப்படும் மனுக்கள் முறையாக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.

கோரிக்கை மனு மட்டும் அளிக்க வரும் விவசாயிகள் மணிக்கணக்கில் பசியில் காத்திருந்து மனு அளிக்கின்றனர். அனைவருக்கு பல்வேறு பணிகள் இருக்கிறது. இதனால் மன அழுத்தம் ஏற்படுகிறது. எனக்கே மன அழுத்தத்தினால் சர்க்கரை நோய் வந்துள்ளது.

அதனால் வரும் கூட்டங்களில் பேசுவதை குறைத்து கொண்டு கோரிக்கை மனுக்களை முன்கூட்டியே பெற்று கொண்டால் கூட்டத்திற்கு வரும் அதிகாரிகளை கொண்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்கு விவசாயிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

நீர் மேலாண்மை, விவசாயம் சார்ந்த பணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விருதுகளை பெற்று வருகிறது. இதற்கு விவசாயிகளின் ஒத்துழைப்பே காரணம்.

மக்கள் ஒத்துழைப்பு

நீர்நிலை புறம்போக்கு நிலங்கள் அகற்றுவதில் தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

பருவ மழை வர உள்ளது. இதனால் அரசு அலுவலர்களுக்கு கால்வாய் ஆக்கிரமிப்புகள் ஏதேனும் இருந்தாலும், கால்வாய்களை தூர்வாரி தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

விவசாயிகள் கால்வாய் எங்கேயும் ஆக்கிரமிப்புகள் இருந்தாலும், கால்வாய்கள் தூர்வரப்படாமல் இருந்தாலும் மனுவாக அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து கூட்டத்தில் விவசாயிகள் தனி, தனியாக வந்து கலெக்டர் மற்றும் வேளாண்மை அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சத்தியமூர்த்தி, வேளாண்மை துணை இயக்குனர் மாரியப்பன், மண்டல இணை இயக்குனர் (கால்நடை பராமரிப்புத்துறை) சோமசுந்தரம், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் நடராஜன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்