காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

தடையின்றி குடிநீர் வழங்கக்கோரி கும்பகோணத்தில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2022-07-04 20:06 GMT

கும்பகோணம்,

தடையின்றி குடிநீர் வழங்கக்கோரி கும்பகோணத்தில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலை மறியல்

கும்பகோணம் மேலக்காவிரி பகுதி, சுவாமிமலை மெயின் ரோடு, பைபாஸ் இணைப்பு சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக குடிநீர் வரவில்லை என கூறப்படுகிறது. எனவே தடையின்றி குடிநீர் வழங்கக்கோரி நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஆனந்த் தலைமையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. எனவே தடையின்றி குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் கும்பகோணம்- திருவையாறு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இது குறித்து தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பேபி மற்றும் ரமேஷ் குமார் உள்ளிட்ட போலீசார் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் நகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு தட்டுப்பாடு இன்றி குடிநீர் வழங்க ஏற்பாடுகள் செய்து கொடுக்குமாறு கேட்டுக் கொண்டனர்.மேலும் குடிநீர் தொடர்ந்து கிடைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்