கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல்

கபிஸ்தலம் அருகே கொள்ளிடம் ஆற்றில் கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் தொடக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 28 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-09-01 20:41 GMT

கபிஸ்தலம்;

கபிஸ்தலம் அருகே கொள்ளிடம் ஆற்றில் கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் தொடக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 28 பேர் கைது செய்யப்பட்டனர்.

கூட்டுக்குடிநீர் திட்டம்

கபிஸ்தலம் அருகே வாழ்க்கை கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து அம்மாப்பேட்டை ஒன்றியத்துக்கான 252 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டத்துக்காக கொள்ளிடம் ஆற்றில் வீரமாங்குடி, சருக்கை, வாழ்க்கை ஆகிய பகுதிகளில் ஜல் ஜீவன்மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.1,752 கோடியில் பணி தொடங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சருக்கை ஊராட்சி புது குடிசை பகுதியில் விவசாயிகள் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

28 பேர் கைது

கொள்ளிடத்தில் தடுப்பணை திட்டத்தை தொடங்கிய பின்னரே இத்திட்டத்தை தொடங்க வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி போராட்டத்தில் ஈடுபட்ட 28 விவசாயிகளை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

அமைதி பேச்சுவார்த்தை

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. கூட்டத்தில் சருக்கை ஊராட்சி தலைவர் ஜெகநாதன், ஒன்றிய கவுன்சிலர் சரவணபாபு, சத்தியமங்கலம் ஊராட்சி தலைவர் செல்வராஜ், தூத்தூர் ஊராட்சி தலைவர் காமராஜ் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கிராம மக்கள் கலந்து கொண்டனா். இவர்களுடன் கும்பகோணம் கோட்டாட்சியர் பூர்ணிமா, பாபநாசம் தாசில்தாா் பூங்கொடி, தமிழ்நாடு கூட்டு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் ஆறுமுகம், நிர்வாக பொறியாளர்கள் சேகர், ஜெயக்குமார், முருகேசன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

கதவணை

கூட்டத்தில், வாழ்க்கை - தூத்தூர் இடையே கதவனை கட்ட அறிவிப்பு வழங்கி அரசாணை வழங்க மாவட்ட நிர்வாகத்தால் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வருகிற நிதியாண்டில் கதவனை அமைப்பதற்கு முதல் முன்னுரிமை அளிக்கப்பட்டு அரசாணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதன்பேரில் அமைதி பேச்சு வார்த்தை சுமூகமாக நடத்தப்பட்டு பணிகள் தொடங்க ஒத்துழைப்பு அளிப்பதாக கிராம மக்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் தொடங்கின. சம்பவ இடத்தில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்