ஈமக்கிரியை மண்டபம் கட்டக்கோரி கருப்புக்கொடி ஏந்தி பொதுமக்கள் போராட்டம்

மயிலாடுதுறை அருகே மாப்படுகையில் ஈமக்கிரியை மண்டபம் கட்டக்கோரி கருப்புக்கொடி ஏந்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-05-02 19:15 GMT

மயிலாடுதுறை அருகே மாப்படுகையில் ஈமக்கிரியை மண்டபம் கட்டக்கோரி கருப்புக்கொடி ஏந்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈமக்கிரியை மண்டபம்

மயிலாடுதுறை நகராட்சி 1-வது வார்டு மற்றும் மாப்படுகை ஊராட்சி பகுதியை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு கிட்டப்பா பாலம் அருகே காவிரி ஆற்றங்கரையில் சுடுகாடு உள்ளது. அதே பகுதியில்தான் ஈமச்சடங்குகளை செய்வதும் வழக்கம். கடந்த பல ஆண்டுகளாக அந்த சுடுகாட்டிற்கு அடிப்படை வசதி இல்லாததோடு ஈமக்கிரியை மண்டபம் இல்லை.

இதனால் யாராவது இறந்தால் சாலையோரத்தில் 16-ம் நாள் காரியத்தை செய்ய வேண்டிய அவல நிலை ஏற்பட்டு வந்தது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியதை அடுத்து கிட்டப்பா பாலம் அருகே ஈமக்கிரியை மண்டபம் கட்டுமான பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்

ஆனால் ஈமக்கிரியை மண்டபம் கட்டுமான பணி தொடக்கத்திலேயே நிறுத்தப்பட்டது. இந்த பணியை மீண்டும் தொடங்க கோரி மாப்படுகை ஊராட்சி மற்றும் நகராட்சி வார்டு பொதுமக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியுடன் இணைந்து கடந்த மாதம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தை நடத்தினர்.

அப்போது கட்டுமான பணி உடனே தொடங்கும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனால் தற்போதுவரை எந்த பணியும் தொடங்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் ஈமக்கிரியை மண்டபம் கட்டக்கோரி நேற்று அனைத்து வீதிகளிலும் கருப்புக்கொடி ஏற்றினர். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ரெயில்வே கேட் அருகே கையில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்