செறிவூட்டப்பட்ட அரிசி குறித்த உண்மை நிலவரத்தை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்
செறிவூட்டப்பட்ட அரிசி குறித்த உண்மை நிலவரத்தை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்
செறிவூட்டப்பட்ட அரிசி குறித்த உண்மை நிலவரத்தை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள் கலந்துகொண்டு பேசினர். இதன் விவரம் வருமாறு:-
விவசாய நலச்சங்க தலைவர் சேதுராமன்: திருவாரூர் மாவட்டத்தில் தூர்வாரும் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும். ஏற்றுமதி தரத்துக்கேற்ப நெல்விதைகளை வேளாண்துறை தேர்வு செய்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
விவசாய சங்க செயலாளர் முகேஷ்: திருவாரூர் மாவட்டத்தில் பெண் கிராம நிர்வாக அலுவலர்கள் பணியாற்றும் பகுதியில் கழிவறை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவதில் அலட்சியமாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உண்மை நிலவரத்தை தெரிவி்க்க வேண்டும்
விவசாய சங்கத்தை சேர்ந்த ராமமூர்த்தி: செறிவூட்டப்பட்ட அரிசி குறித்த உண்மை நிலவரத்தை மாவட்ட நிர்வாகம் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். செம்மங்குடி பகுதியில் நிரந்தர கொள்முதல் நிலையம் திறக்கப்பட வேண்டும். வயல்வெளிச்சாலைகளை சீரமைத்து தர வேண்டும்.
விவசாய சங்க மாவட்ட பொறுப்பாளர் முருகையன்: முத்துப்பேட்டை ஆசாத்நகர் சட்ரஸ் பகுதியில் தேங்கியுள்ள நன்னீரில் உள்ள மீன்களை பிடிப்பதற்காக 5 மோட்டார் வைத்து தண்ணீரை இறைத்து கொண்டுள்ளனர். அங்குள்ள மீன்களை பிடிக்க அரசுத்துறை வாயிலாக ஏலம் விடுபடுகிறதா? என்பது தெரியவில்லை. முத்துப்பேட்டை தாலுகா அலுவலகத்தில் சர்வே பிரிவு தொடங்கப்பட வேண்டும்.
விதை நெல் உற்பத்தி
ஊராட்சி முன்னாள் தலைவர் சண்முகசுந்தரம்: சேந்தமங்கலம் அருகே சாலை பழுதாகி உள்வாங்கியுள்ளது. மாவட்டத்தில் விதைநெல் உற்பத்தி செய்யப்படுகிறதா? அல்லது தனியாரிடம் வாங்கி வினியோகிக்கப்படுகிறதா? என்பது குறித்து தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், வருவாய் கோட்டாட்சியர்கள் சங்கீதா (திருவாரூர்), கீர்த்தனா (மன்னார்குடி), வேளாண்மைதுறை இணை இயக்குனர் ஆசிர் கனகராஜன், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் சித்ரா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன், வேளாண்மை துணை இயக்குனர் ரவீந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ஏழுமலை உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.