தும்பல்பட்டி ஊராட்சியில் மக்கள் சந்திப்பு முகாம்: 186 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்-கலெக்டர் கார்மேகம் வழங்கினார்
தும்பல்பட்டி ஊராட்சியில் மக்கள் சந்திப்பு முகாமில் 186 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.
மக்கள் சந்திப்பு முகாம்
சேலம் மாவட்டம் தும்பல்பட்டி ஊராட்சியில் மக்கள் சந்திப்பு திட்ட முகாம் கலெக்டர் கார்மேகம் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த முகாமில் சாமக்குட்டபட்டி, அடிமலைப்பட்டி, இரட்டைபுலிபுதூர், ஜல்லூத்துப்பட்டி, கூட்டாறு, குரங்கு புளியமரம், மஞ்சபானி, நடுப்பட்டி, நூலாத்துகோம்பை, வேடப்பட்டி, தும்பல்பட்டி, இரட்டைமலைக்காடு ஆகிய 12 கிராமங்களில் அதிகாரிகள் நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனு பெற்றனர்.
மக்கள் சந்திப்பு முகாமில் கலெக்டர் கார்மேகம் பேசியதாவது:-
இந்த முகாமில் குடிநீர், சாலை வசதிகள், பள்ளிகளுக்கான கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கு முன்னுரிமை கொடுத்து அதை செயல்படுத்த விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மலைவாழ் மக்கள் சாதிச்சான்றிழ் வேண்டி அரசு இ-சேவை மையத்தில் விண்ணப்பித்தாலே வீடு தேடி சான்றிதழ் வரக்கூடிய நிலைமை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
நலத்திட்ட உதவி
வருவாய்த்துறையின் மூலம் ஒரு வார காலத்திற்குள் சான்றிதழ் வழங்குவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டத்தை பொறுத்தவரை பொதுமக்கள் அளிக்கும் மனுக்களின் மீது 98.5 சதவீதம் மனுக்களுக்கு உடனடியாக பதில் வழங்கப்பட்டுள்ளது. மாநிலத்திலேயே விரைவாக மனுக்களுக்கு தீர்வு காணும் மாவட்டமாக சேலம் மாவட்டம் திகழ்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த முகாமில் பல்வேறு துறைகள் சார்பில் 186 பயனாளிகளுக்கு ரூ.68 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கார்மேகம் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, உதவி கலெக்டர் (பயிற்சி) சங்கீத் பல்வந்த் வாகி, உதவி கலெக்டர் விஷ்ணுவர்த்தினி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிக்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.