பஞ்சாயத்து அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை
பஞ்சாயத்து அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.;
பாளையங்கோட்டை பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட கீழநத்தம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அரசு அலுவலர் குடியிருப்பு பகுதியில் ஏராளமான ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் குடியிருந்து வருகிறார்கள். இந்த குடியிருப்புக்கு குடிதண்ணீர் பிரச்சினை இருந்து வருகிறது. 10 நாட்களுக்கு ஒரு முறை குடிதண்ணீர் வருவதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி பொதுமக்கள் நேற்று பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சீராக குடிநீர் வழங்க வேண்டும். டெங்கு ஒழிப்பு கொசு மருந்து அடிக்க வேண்டும். தெரு விளக்கு செய்து வர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் போட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.